சென்னை: “தமிழகத்தில் 2026-ல் அமையும் கூட்டணி ஆட்சியில் பாமக இருக்கும்,” என்று பாமக தலைவர் அன்புமணி கூறியுள்ளார்.
சென்னை கொரட்டூரில், ஜெமினி ரோட்டரி சங்கம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட தேசிய அளவிலான பேட்மிட்டன் சாம்பியன்ஷிப் போட்டியை பாமக தலைவர் அன்புமணி தொடங்கி வைத்து, பேட்மிட்டன் விளையாடினார். நிகழ்வில் அன்புமணி பேசியது: “போலியோவை விரட்டியதில் ரோட்டரி சங்கங்களுக்கு முக்கிய பங்குண்டு. நான் தமிழக பேட்மிட்டன் சங்க தலைவரான பிறகு திறமையின் அடிப்படையில் வீர்கள் தேர்வு செய்யப்பட்டனர். காலநிலை மாற்றம், உலகம் வெப்பமயமாதல் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். கடந்த காலத்துடன் ஒப்பிடும்போது குறைந்த நாட்களில் மழை பொழிவு அதிகரித்துள்ளது. கோயம்பேடு பகுதியில் உள்ள 65 ஏக்கர் நிலத்தில் பசுமை பூங்கா அமைக்க வேண்டும்,” என்று அவர் பேசினார்.
பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “சர்வதேச பேட்மிட்டன் போட்டிகளை நடத்துவதற்கு, தமிழகத்தில் இண்டோர் ஸ்டேடியம் அமைக்க அமைச்சர் உதயநிதி நடவடிக்கை எடுக்க வேண்டும். மருத்துவர்களுக்கு பாதுகாப்பு வேண்டும். அரசு மருத்துவர்களுக்கு பணிச்சுமை அதிகமாக உள்ளது. புதிய மருத்துவர்களை பணிக்கு எடுக்க அரசு தயங்குகிறது. மருத்துவம், போக்குவரத்து, மின்சார துறைகளில் தற்காலி பணியாளர்களைத்தான் அரசு நியமனம் செய்கிறது.
திமுக கொடுத்த 520 தேர்தல் வாக்குறுதிகளில், 490 நிறைவேற்றவில்லை. தமிழகத்தை 57 ஆண்டுகளாக திமுக, அதிமுக மாறி மாறி ஆட்சி செய்துள்ளனர். முறையாக வடிகால் கட்டுமானங்கள் அமைக்கப்படவில்லை. தமிழக அரசு காலநிலை மாற்றத்துக்காக எடுத்துள்ள முயற்சிகள் பூஜ்ஜியம் ஆகும். 2026-ல் கூட்டணி ஆட்சி அமையும். அந்தக் கூட்டணியில் பாமக இருக்கும்” என்றார்.
+ There are no comments
Add yours