மதுரை: திருநகர் வழக்கிலும், நடிகை கஸ்தூரி கைது செய்யப்படுவார் என, போலீஸார் தெரிவித்தனர்.
சென்னையில் சமீபத்தில் இந்து முன்னணி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டம் ஒன்றில் நடிகை கஸ்தூரி பங்கேற்றார். அங்கு அவர் பேசியபோது, தெலுங்கு மக்களை பற்றி சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்திருந்தார். இதற்கு தெலுங்கு மொழி பேசும் மக்களிடம் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதன்பின், கஸ்தூரி தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்தாலும், அவர் மீது நடவடிக்கை எடுக்க, மதுரை, திருச்சி, சென்னை உள்ளிட்ட இடங்களில் அவருக்கு எதிராக காவல் நிலையங்களில் புகார்கள் அளிக்கப்பட்டன.
கஸ்தூரி மீது சென்னை, திருச்சியில் வழக்கு பதிவு செய்த நிலையில், மதுரை திருநகர் காவல் நிலையத்திலும் 6 பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து தனிப்படையினர் அவரை தேடினர். இந்நிலையில், மதுரையில் தொடர்ந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு, கஸ்தூரி உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார்.
மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்ததால் திருநகர் காவல் உதவி ஆணையர் குருசாமி தலைமையிலான போலீஸார் கஸ்தூரியை தேடினர். இருப்பினும், சென்னை வழக்கில் அவர் ஹைதரபாத்தில் வைத்து சனிக்கிழமை கைது செய்யப்பட்டார். மதுரை வழக்கிலும், அவரை முறையாக கைது செய்ய திருநகர் போலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
சென்னை நீதிமன்றத்திற்கு மதுரை வழக்கு குறித்து மனு தாக்கல் செய்து, சிறையில் இருந்து அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரித்து கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என, திருநகர் காவல்துறையினர் தெரிவித்தனர்.
+ There are no comments
Add yours