குறைந்த வயது உடையவர்கள் டாஸ்மாக் கடைக்கு வருகை புரிபவர்கள் பற்றி தகவல் கொடுக்கும் ஊழியர்களுக்கு ஊக்க தொகை வழங்கப்படும் என மதுவிலக்குத்துறை அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமை செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் டாஸ்மாக் பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக தமிழக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் முத்துசாமி டாஸ்மாக் பணியாளர்கள் சங்க நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் முத்துசாமி, டாஸ்மாக் சங்க நிர்வாகிகள் கொடுத்த 55 கோரிக்கைகளில் 39 கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரிவித்தார். டாஸ்மாக் கடைகளுக்கு வாடகையை ஒழுங்குப்படுத்துவது,தனி மின்கட்டண மீட்டர் அமைப்பது, பாதுகாப்பு பெட்டகம் வைப்பது மற்றும் கண்காணிப்பு கேமரா 500 கடைகளுக்கு அதிகரிப்பது உள்ளிட்ட சீர்த்திருத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறினார்.
குறைந்த வயது உடையவர்கள் டாஸ்மாக் கடைக்கு வருகை புரிந்தால் அவர்கள் தொடர்பான தகவல்களை மாவட்ட நிர்வாகத்திடம் கொடுத்தால் அந்த நபருக்கு ஆலோசனைகள் வழங்குவதுடன், தகவல் கொடுத்த ஊழியர்களுக்கு ஊக்க தொகை வழங்கப்படும் என தெரிவித்தார்.
மதுபானத்தில் உள்ள விலையை தவிர்த்து கூடுதலாக ஒரு ரூபாயும் வாங்க கூடாது என திட்டவட்டமாக கூறியுள்ளதாகவும், அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் விலை பட்டியல் வைக்கப்படும் என கூறினார். டெட்ரா பேக் குறித்து ஆய்வு செய்வதற்காக குழு அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், அந்த குழு ஆய்வு செய்த அறிக்கையின் முடிவை பொருத்து நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.
+ There are no comments
Add yours