‘கொங்கு’ மண்டலம் எனக் குறிப்பிடப்படும் மேற்கு மண்டலத்தில் கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், தருமபுரி, நாமக்கல், கிருஷ்ணகிரி மற்றும் கரூர் மாவட்டங்கள் உள்ளடக்கி உள்ளன. இந்த மேற்கு மண்டலம் எம்.ஜி.ஆர். காலம் முதல் அதிமுகவின் இதயம் எனக் கூறும் அளவுக்கு அக்கட்சியின் அசைக்கமுடியாத வாக்கு வங்கியாக உள்ளது. ஜெயலலிதா காலம் வரை இதில் எவ்வித மாற்றமும் ஏற்படாமல் வாக்கு வங்கித் தக்கவைக்கப்பட்டது.
தமிழகச் சட்டப்பேரவை: 2001-ம் ஆண்டு நடத்த தமிழகச் சட்டப் பேரவைத் தேர்தலில், அ.தி.மு.க. கூட்டணி மேற்கு மண்டலத்தில் 48 தொகுதிகளில் போட்டியிட்டு, 38 தொகுதிகளைக் கைப்பற்றியது. 2006-ல் நடந்த சட்டப் பேரவைத் தேர்தலில் அ.தி.மு.க. தோல்வியைச் சந்தித்தாலும், மேற்கு மண்டலத்தில் அ.தி.மு.க. கூட்டணிக் கட்சிகளில் இருந்து 16 பேர் சட்டப்பேரவை உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
2008-ல் செய்யப்பட்ட தொகுதி மறு சீரமைப்பால் மேற்கு மண்டலத்தில் 61 சட்டப் பேரவைத் தொகுதிகள் உருவாக்கப்பட்டன. கொங்கு மண்டலத்தில் கொடி நாட்டினால் ஆட்சியைப் பிடித்துவிடலாம் எனக் கருதிய திமுக தலைவர் கருணாநிதி, உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டைக் கோவையில் நடத்தினர். மாநாட்டிற்காகக் கோவைக்குச் செல்லும் அனைத்து சாலைகளும் புதிதாக அமைக்கப்பட்டன. நகருக்குள் சாலைகள் விரிவானது; நூற்றுக்கணக்கான பூங்காக்கள் உருவாக்கப்பட்டு, ரூ.300 கோடிக்கும் மேலான மதிப்பில் கோவையே புதுப் பொலிவு பெற்றது. ஆனால், தி.மு.க. தலைவர் கருணாநிதியின் கணக்கு பொய்த்தது. 2011 சட்டப்பேரவைத் தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி மேற்கு மண்டலத்தின் 61 தொகுதிகளில் 55 தொகுதிகளைக் கைப்பற்றியது. 2016 சட்டப் பேரவைத் தேர்தலில் 61 தொகுதிகளில் 47 தொகுதிகளைக் கைப்பற்றியது.
மக்களவைத் தேர்தல்: 2009 மக்களவைத் தேர்தலில் கோவை, பொள்ளாச்சி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர் ஆகிய தொகுதிகளை அ.தி.மு.க. கைப்பற்றியது. 2014 மக்களவைத் தேர்தலில் 39 தொகுதிகளில் தனித்துப் போட்டியிட்ட அ.தி.மு.க. 37 தொகுதிகளை வென்றது. மேற்கு மண்டலத்தில் 7 மக்களவைத் தொகுதிகளையும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றனர்.
மடைமாறிய கொங்கு: தமிழக அரசியலில் இரு பெரும் ஆளுமைகளாக வலம் வந்த கருணாநிதி, ஜெயலலிதா இருவரது மறைவுக்குப் பிறகு, 2019 மக்களவைத் தேர்தல் நடைபெற்றது. 2016-ல் ஆட்சியைப் பிடித்து ஓராண்டுக்குள் முதல்வராக இருந்த ஜெயலலிதா மறைந்தார். பல்வேறு சிக்கல்களுக்குப் பிறகு கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த பழனிசாமி முதல்வராகவும், அதே பகுதியைச் சேர்ந்த எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, செங்கோட்டையன் போன்றோர் முக்கியத் துறைகளின் அமைச்சர்களாகவும் இருந்தனர். அதனால், 2019-ல் நடந்த மக்களவைத் தேர்தலில் எங்குத் தோற்றாலும் கொங்கு மண்டலத்தில் அ.தி.மு.க. வேட்பாளர்கள் வெற்றி பெறுவர் என்று கருத்துக்கணிப்புகள் வெளியாகின.
ஆனால், தி.மு.க. தலைமையிலான ‘ஜனநாயக முற்போக்குக் கூட்டணி’ 39 தொகுதிகளில் போட்டியிட்டு, 38 தொகுதிகளைக் கைப்பற்றியது. அ.தி.மு.க.வின் ‘கோட்டை’யாகக் கருதப்பட்ட ‘கொங்கு அரசியலை’ வீழ்த்தி கொடி நாட்டியது தி.மு.க.
மீண்டும் அ.தி.மு.க: 2019 மக்களவைத் தேர்தலின் வெற்றியோடு, காங்கிரஸ், வி.சி.க, ம.தி.மு.க, இ.கம்யூ., மா.கம்யூ., உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து 2021 சட்டப் பேரவைத் தேர்தலை திமுக சந்தித்தது. தி.மு.க. கூட்டணி 159 தொகுதிகளில் வென்றது. அ.தி.மு.க. கூட்டணி 75 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியது. 125 தொகுதிகளில் தனிப்பெரும்பான்மையுடன் வென்ற தி.மு.க. ஆட்சி அமைத்தது.
ஆனால், மேற்கு மண்டலத்தில் உள்ள 68 சட்டப் பேரவைத் தொகுதிகளில் 44 தொகுதிகளை அ.தி.மு.க. கூட்டணி வென்றது. 24 தொகுதிகளை மட்டுமே தி.மு.க. கூட்டணி கைப்பற்றியது. மேற்கு மண்டலத்தில் குறிப்பாகக் கோவை மாவட்டத்தில் உள்ள 10-ல் 10 தொகுதிகளையும், சேலத்தில் 11-க்கு 10-ம், தருமபுரியில் உள்ள 5-க்கு ஐந்தையும் அ.தி.மு.க. கைப்பற்றியது. கைநழுவிய மேற்கு மண்டலம் மீண்டும் தங்கள் வசமே வந்து விட்டதாக, அ.தி.மு.க. தலைவர்கள் மேடைகளில் முழங்கினர்.
செந்தில் பாலாஜியின் வருகை: 2022 நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலைக் கருத்தில் கொண்டு, ‘கொங்கு அரசியலை’ மீண்டும் தன் பக்கம் வளைக்கத்திட்டமிட்ட தி.மு.க. எதிரணியில் இருந்து தம் கட்சிக்கு வந்த கரூரைச் சேர்ந்த அமைச்சர் செந்தில் பாலாஜியை, கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சராக நியமித்தது. ‘கொங்கு’ அரசியலின் அடிப்படைகளை உணர்ந்திருந்த செந்தில் பாலாஜி, தீவிர களப் பணியாற்றி, நகர்ப்புற உள்ளாட்சியில் சாதி, செல்வாக்கு அடிப்படையில் வேட்பாளர்களைத் தேர்வு செய்தார்.
செந்தில் பாலாஜியின் இந்த முடிவை, சமத்துவக் கருத்துடைய தி.மு.க. நிர்வாகிகளும் தொண்டர்களும் கடுமையாக விமர்சித்தனர். செந்தில் பாலாஜியின் அணியினரை, ‘கரூர் டீம்’ என்று வெளிப்படையாகவே விமர்சித்தனர். ஆனால் அவரது முடிவுக்குப் பலன் கிடைத்தது. கோவை மாநகராட்சியில் 100 வார்டுகளில் 96 வார்டுகளைத் தி.மு.க. கூட்டணி கைப்பற்றியது. தி.மு.க.வின் அசைக்கமுடியாத தலைவராக மட்டுமின்றி அரசியலில் சாணக்கியனாத் திகழ்ந்த கருணாநிதியால் கைப்பற்ற முடியாத மேற்கு மண்டலத்தை, முதல்வர் ஸ்டாலின் தனது அரசியல் வியூகங்களால் தன்வசப்படுத்தினார்.
வீழ்த்தப்பட்ட சூளுரை: உள்ளாட்சித் தேர்தலில் வெற்றியைப் பெற்றுத் தந்த செந்தில் பாலாஜியே, 2024 மக்களவைத் தேர்தலில் மேற்கு மண்டலத் தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அமலாக்கத் துறையால் கைதால் ஓராண்டாகச் சிறையில் இருக்கிறார்.
செந்தில் பாலாஜி இல்லாத சூழலில் மேற்கு மண்டலத்தைத் தக்கவைக்கத் தேர்தல் பொறுப்பாளராக அமைச்சர் உதயநிதி நியமிக்கப்படுவார் எனக் கூறப்பட்டது. தேர்தல் நெருங்கும் வேளையில் சேலத்தில் நடந்த தி.மு.க. இளைஞரணி மாநாட்டில் அறிவிப்பு வரும் எனவும் கட்சி வட்டாரங்கள் கிசுகிசுத்தன. ஆனால், மேற்கு மண்டலப் பொறுப்பாளராக அமைச்சர் முத்துச்சாமி நியமிக்கப்பட்டார். இதனால், 2024 தேர்தலில் மேற்கு மண்டலம் மீண்டும் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக தி.மு.க.விற்கு மாறியது.
இந்தச் சூழலில், ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு பிளவு பட்டிருந்த அ.தி.மு.க.வில் இருந்து முன்னாள் முதல்வரான ஓ.பன்னீர்செல்வமும் பிரிந்ததால் மேலும் வலுவிழந்திருந்தது. இது தி.மு.க.விற்குச் சாதகமாகப் பார்க்கப்பட்டாலும், பா.ஜ.க. தனித்துக் களம் கண்டது. குறிப்பாக, பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை கோவைத் தொகுதியில் போட்டியிட்டார். அவர் தன்னை எதிர்த்து நிற்கும் தி.மு.க. வேட்பாளர் மட்டுமின்றி அ.தி.மு.க. வேட்பாளரும் டெபாசிட் இழப்பர் எனச் சூளுரைத்தார். அவருக்குச் சாதகமாகவே கருத்துக் கணிப்புகளும் வெளியாகின. ஆனால், தி.மு.க. கூட்டணி அனைவரது கருத்துக் கணிப்புகளையும் பொய்யாக்கி, மேற்கு மண்டல வாக்கு வங்கியை தக்கவைத்ததோடு 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது.
கொங்கில் திமுக! – இந்த வெற்றியை இன்று (ஜூன் 15) கோவையில் கொண்டாடுகிறது தி.மு.க. மேற்கு மண்டலத்தின் தேர்தல் பொறுப்பாளராக உதயநிதி நியமிக்கப்பட்டிருந்தால் தற்போது கிடைத்திருக்கும் வெற்றியை அமைச்சர் உதயநிதிக்குக் கிடைத்த வெற்றியாக, ‘கொங்கின் மாமன்னன் உதயநிதி’ என உடன்பிறப்புகள் கொண்டாடியிருப்பர். அதைக் காரணம் காட்டியே அவருக்குத் துணை முதல்வர் பதவியும் வழங்கப்பட்டிருக்க வாய்ப்புண்டு.
ஆனால், வாரிசு அரசியல் சர்ச்சையும் எழுந்திருக்கும். அதற்கெல்லாம் வாய்ப்பளிக்காமல், பல்வேறு வியூகங்கள் மூலம், குறிப்பாக, குறிப்பிட்ட சமூகத்தின் பிடியில் இருந்த மேற்கு (கொங்கு) மண்டலத்தைப் பல்வேறு சமூகங்களைச் சேர்ந்த தனது தலைவர்களைக் கொண்டு, கொங்கு அரசியலை ஒடுக்கி மேற்கு மண்டலத்தை வென்றிருக்கிறது திமுக. அதனை மீண்டும் அழுத்தமாக சொல்லும் மேடையாக இன்றைய பொதுக்கூட்டம் அமையும் என கருதப்படுகிறது.
+ There are no comments
Add yours