தமிழக வெற்றிக் கழகம் கட்சியைத் தொடங்கிய விஜய் கொடி, பாடல் அறிமுகம் என தன் அரசியல் பயணத்தில் வேகம் காட்டி வருகிறார். தற்போது அக்கட்சி சார்பாக இந்த மாதம் மாநாட்டை நடத்த தீவிரப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதற்கு யாரெல்லாம் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்படுவார்கள் என்னும் பேச்சுதான் கடந்த சில தினங்களாக முக்கியமான விவாதமாக மாறியுள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் ’தமிழக வெற்றிக் கழகம்’ என்ற கட்சியைத் தொடங்கினார் நடிகர் விஜய். 2026-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலை இலக்காக வைத்து தீவிரமாகப் பணியாற்றி வருகிறார். குறிப்பாக, கட்சி மாநாடு நடத்த திட்டமிடப்பட்டது. இதற்காக பல்வேறு பகுதிகளில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் ஆய்வு மேற்கொண்டார். இந்த நிலையில், விக்கிரவாண்டியில் வரும் 23-ம் தேதி மாநாடு நடைபெறவுள்ளது. இதற்காக தேர்வு செய்யப்பட்ட இடத்தில் மாநாட்டுக்கான ஏற்பாடுகள் குறித்து காவல் துறை தரப்பில் 21 கேள்விகளுக்கு விடையளிக்குமாறு கட்சி நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் முக்கிய நிர்வாகிகள் கேள்விக்கான பதிலைத் தயாரித்துள்ளனர். இது குறித்து கட்சித் தலைவர் விஜய் ஆலோசனை மேற்கொண்டார்.
இப்படியாக, ஒருபக்கம் மாநாட்டுக்காக வேலைகள் வேகமெடுத்து வரும் சூழலில், மறுபக்கம் யாரெல்லாம் இந்த மாநாட்டில் கலந்துகொள்வார்கள் என்னும் பட்டியல் சொல்லப்பட்டு வருகிறது. அதன்படி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இதில் பங்கேற்பார் என தகவல் சொல்லப்பட்டு வருகிறது. இதுதவிர, பல மாநில முதல்வர்கள் இதில் கலந்துகொள்ளவிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. அதில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, கேரள முதல்வர் பினராயி விஜயன் எனப் பலருக்கும் அழைப்பு வழங்க திட்டமிட்டுள்ளனர். அதுமட்டுமில்லாமல், தமிழகத்தில் உள்ள முக்கியமான கட்சிகளிலிருந்து பலர் தவெக-வில் சேர வாய்ப்பு இருப்பதாகவும் பேசப்படுகிறது.
ஏன் ராகுல் காந்தி வருகை அதிகம் பேசப்படுகிறது? – 2009-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலையொட்டி காங்கிரஸை வலுப்படுத்த நாடு தழுவிய பயணத்தை மேற்கொண்டார் ராகுல் காந்தி. அப்போது விஜய் – ராகுல் சந்திப்பு நடந்தது. அப்போதே விஜய் காங்கிரஸில் இணையப் போகிறார் எனச் சொல்லப்பட்டது. ஆனால், ”பொதுவாக அரசியல், சினிமா, விஜய் இயக்கம் குறித்துதான் பேசப்பட்டது. காங்கிரஸில் இணைவது தொடர்பாகப் பேசவில்லை” என விளக்கமளித்தார் விஜய். அப்போது தொடங்கிய அந்தப் பேச்சு 15 ஆண்டுகள் கடந்து விஜய் கட்சித் தொடங்கிய பின்னரும் தொடர்கிறது. இதன் அடிப்படையில்தான் விஜய், காங்கிரஸுடன் நெருக்கமாக இருக்கிறார் என முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் விஜயதரணியும் கூறியிருந்தார்.
ராகுல் வருகை உண்மைதானா? – இது குறித்து தவெக கட்சியில் விசாரித்தோம். அவர்கள், “மாநாட்டுக்கு அனுமதி பெறும் வேலைகளில் தான் கட்சி முழு ஈடுபாட்டுடன் செயல்பட்டு வருகிறது. மாநாட்டுக்கான அழைப்பிதழைக் கூட யாருக்கும் வழங்கவில்லை. ராகுல், மற்ற மாநில முதல்வர்களுக்கு அழைப்பு எனச் செய்திகளில் வருவதெல்லாம் எங்களுக்கே ஷாக் தான். இப்போது வரை யாரும் அழைக்கப்படவில்லை. அப்படி அழைத்தால் கட்சி அதிகாரபூர்வமாக அறிவிக்கும்” என முடித்துக்கொண்டனர்.
ஆக, ‘ராகுல் அழைப்பு ‘ என்னும் செய்தியில் உண்மையில்லை என்கின்றனர் விஜய் கட்சியினர். சரி, காங்கிரஸ் கட்சியில் என்ன பேசப்படுகிறது? இது குறித்து விசாரித்தபோதும் ”இது யாரோ கிளப்பிவிட்டது. ஓர் அரசியல் கட்சியின் துவக்க விழாவில் மற்றொரு அரசியல் கட்சித் தலைவர் ராகுல் காந்தி எப்படி கலந்துகொள்வார்? அதற்கு வாய்ப்பே இல்லை. அரசியல் நாகரிகம் கருதி ராகுல் காந்தி ஒரு வாழ்த்து செய்தியை நிச்சயம் பதிவு செய்வார்” என்கின்றனர் காங்கிரஸ் வட்டாரத்தினர்.
இது குறித்து பத்திரிக்கையாளர் குபேந்திரனிடம் பேசினோம். அவர், “அது முற்றிலும் தவறான செய்தி. யாருக்கும் எந்த அழைப்பும் விடுக்கப்படவில்லை என்பதுதான் உண்மை. மாநாட்டில் ராகுல் காந்தி கலந்துகொள்வதில் தவறில்லை. ஆனால், தற்போது ’திமுக – காங்கிரஸ்’ இடையே சிறிய நெருடல் இருக்கும் வேளையில் ராகுல் காந்தி வருவாரா என்பது சந்தேகம்தான். ஆகவே, இது திமுக – காங்கிரஸ் கூட்டணியில் கல்லெறியும் யுக்தியாகவே நான் பார்க்கிறேன்” என்றார்.
கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்னும் கட்சியைத் தொடங்கியபோது டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் தொடக்க விழாவில் பங்கேற்றார். அப்படியாக முக்கியமான அரசியல் கட்சித் தலைவர்கள் அழைக்க தவெக திட்டமிட்டுள்ளது. ஆனால், அதில்ப் பட்டியலில் உள்ளவர்கள் யாரெல்லாம் என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.
+ There are no comments
Add yours