கோவை: “ஈஷா யோகா மையத்தில் பெண்கள் யோகா பயிற்சிக்காக சேர்க்கப்பட்டு மூளைச் சலவை செய்யப்படுகிறார்கள்” என்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசனின் குற்றச்சாட்டை, அந்த மையத்தின் அறக்கட்டளை மறுத்துள்ளதுடன், பெண்களின் அழகு குறித்த கருத்துக்கு கடுமையான எதிர்வினையை பதிவு செய்துள்ளது.
இது குறித்து ஈஷா அறக்கட்டளை நிர்வாகம் வெளியிட்ட தகவல்: “‘பெண்களுக்கான அழகுல ஒண்ணு கூந்தல் அழகு’ என்று முத்தரசன் கூறியிருக்கிறார். ஒரு கம்யூனிச சித்தாந்த அரசியல் தலைவரிடம் இருந்து இப்படியான பிற்போக்கு சிந்தனைகள் வெளிவருவது மிகவும் துரதிஷ்டவசமானது. பெண்களின் அழகு கூந்தலில் இல்லை. குடும்பம், சமுதாயம், சித்தாந்தம், மதம் உள்ளிட்ட காரணிகளின் கட்டாயங்கள் ஏதும் இல்லாமல், அவர்களின் வாழ்க்கையை சுயமாக அவர்களின் விருப்பத்தின் பேரில் தேர்ந்தெடுப்பதில் இருக்கிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
உண்மை என்ன என்பதை நேரடியாகவோ அல்லது ஆர்டிஐ மூலம் பெறப்பட்ட தகவல்கள், அரசின் நேரடி கள ஆய்வு அறிக்கைகள் என பொதுவெளியில் எளிதில் கிடைக்கும் அரசு ஆவணங்களை கூட தேடி படிக்காமல், உண்மையை அறிந்து கொள்ளும் விருப்பமும் இல்லாமல், ஏதோவொரு கட்டாய நிர்பந்தத்தின் பேரில், யாரோ சிலர் எழுதிக் கொடுத்த அவதூறுகளை முத்தரசன் ஊடகங்களுக்கு முன் படித்து காட்டியது முதிர்ச்சியான அரசியல் போக்கு இல்லை. ஒரு தேசிய கட்சியின் மாநில செயலாளரே இப்படி செய்வது வருத்தத்திற்கு உரியது.
2022-ம் ஆண்டு கோவை மாவட்ட ஆட்சியரிடம் சமர்ப்பிக்கப்பட்ட வருவாய்த்துறை மற்றும் வனத்துறையின் கூட்டு ஆய்வு அறிக்கையில், “ஈஷா யோக மையத்தின் எல்லைகளை அளவீடு மேற்கொண்டதில் அவர்கள் காப்புக்காடு (வனப்பகுதி) பகுதியில் எந்தவிதமான ஆக்கிரமிப்போ, அத்துமீறல்களோ செய்யவில்லை என நில அளவையிலான அடிப்படையில் தெரிய வருகிறது” என்று கூறப்பட்டு உள்ளது.
பழங்குடியினருக்கு சொந்தமானது என்று கூறப்படும் 44.3 ஏக்கர் அளவிலான நிலங்கள் எதனையும் ஈஷா அறக்கட்டளை ஆக்கிரமிக்கவில்லை என்பதை வருவாய்த்துறை ஆவணங்களும், ஆர்டிஐ தகவல்களும் தெளிவாக கூறுகின்றன.
ஈஷாவில் பல்வேறு நிலைகளில் இருக்ககூடிய நூற்றுக்கணக்கான பெண்களிடம், காவல்துறை மற்றும் சமூக நலத்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில் ஈஷா அவர்கள் பாதுகாப்பாகவும், மகிழ்ச்சியாகவும் இருப்பதாகவே கூறியுள்ளனர். இதனை காவல் துறையும் அதன் அறிக்கையில் பதிவு செய்துள்ளது.
சமீபத்தில் உச்ச நீதிமன்றம், இரு பெண் துறவிகள் குறித்த வழக்கில் இருவரும் அவர்களின் சுய விருப்பத்தின் பேரில் தான் ஈஷாவில் இருப்பதாக மிகத் தெளிவான தீர்ப்பினை அளித்துள்ளது. மேலும் ஒரு அமைப்பை இழிப்படுத்துவதற்காக மனுக்களை பயன்படுத்தக் கூடாது என்றும் கூறியது.
ஈஷாவின் நற்பணிகளால் தினமும் பல்லாயிரகணக்கான விளிம்பு நிலை மக்கள், பழங்குடியின மற்றும் பட்டியலின மக்கள் பயன்பெற்று வருகின்றனர். சாதி, மத, இன பேதங்கள், பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் இன்றி பல கோடி மக்களுக்கு இந்த மண்ணின் ஆன்மிகத்தை அதன் தூய வடிவில் ஈஷா அறக்கட்டளை வழங்கி வருகிறது. ஆகவே, உண்மைக்கு புறம்பான, பொய்யான அவதூறு கருத்துக்களை முத்தரசன் பரப்ப வேண்டாம் என ஈஷா அறக்கட்டளை கேட்டுக்கொள்கிறது” என்று அவர்கள் கூறினர்.
முத்தரசன் கூறியது என்ன? – முன்னதாக, ஈஷா யோகா மையம் மீது பொது விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்தார்.
இதுகுறித்து, கோவையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “ஈஷா யோகா மையத்தில் பல்வேறு விதமான தவறுகள், பெண்களுக்கு எதிரான தவறுகள் நடப்பதாக குற்றச்சாட்டுகள் எழுகின்றன. பெண்கள் யோகா பயிற்சிக்காக சேர்க்கப்பட்டு மூளைச் சலவை செய்யப்படுகிறார்கள். குடும்பத்தினரையே அந்த பெண்கள் சந்திக்க மறுக்கிறார்கள். பெண்களுக்கு அழகில் முக்கியமான ஒன்று கூந்தல் அழகு. ஆனால், அண்மையில் ஈஷா யோகா மையத்தில் இரு பெண்களுக்கு மொட்டை அடிக்கப்பட்டது.
மேலும் பழங்குடி மக்களின் நிலங்கள் பறிக்கப்பட்டு ஈஷா யோகா மையத்தில் சேர்க்கப்பட்டிருப்பதாக அறிக்கை வருகிறது. ஈஷாவுக்கு பிரதமர், குடியரசுத் தலைவர், பிற மாநில முதல்வர்கள், உயர் அரசு அதிகாரிகள் வருவதால் ஈஷா மீது நடவடிக்கை எடுக்க முடியவில்லையா? நீர்வழிப் பாதைகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வருகின்றன.
வன நிலத்தை ஏழை மக்கள் ஆக்கிரமிப்பு செய்திருந்தால் உடனே வெளியேற்றப்படுகிறார்கள். ஈஷாவிற்கு மட்டும் யார் அனுமதி கொடுத்தது? எனவே, ஈஷா யோகா மையம் மீது பொது விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும். இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி வரும் 23-ம் தேதி கோவை சிவானந்தா காலனி பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது” என்று அவர் கூறினார்.
+ There are no comments
Add yours