ஆசிரியர்களை அலர்ட் செய்த அமைச்சர் அன்பில் மகேஷ்!

Spread the love

பள்ளிகளில் மாணவர்களிடையே சாதி ரீதியான மோதல்கள் ஏற்படாமல் இருக்க ஆசிரியர்கள் மிக கவனத்துடன் கண்காணித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் என அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவுறுத்தினார்.

கல்வித்துறை அலுவலர்களுக்கான ஆய்வு கூட்டம் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் உள்ளிட்ட உயரதிகாரிகள், முதன்மை கல்வி அலுவலர் மாவட்ட கல்வி அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, “மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் பள்ளி கல்வித்துறையில் ஏனோ தானோ என்று பணியாற்றும் அதிகாரிகள் அதை தங்கள் அகராதியில் இருந்து நீக்க வேண்டும்.

பள்ளிகளில் மாணவர்களுக்கு தகுந்த ஆலோசனை வழங்கி, சாதி ரீதியான தாக்குதலை தடுக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பள்ளியில் மாணவர்களை கண்காணித்து களத்தில் நடப்பதை அறிந்து உடனடியாக அதை தடுக்க வேண்டிய பொறுப்பு ஆசிரியர்களுக்கு இருக்கிறது. பாதிக்கப்பட்ட மாணவர்களுடைய பின்னணி குறித்து ஆராய்ந்து, அக்கறையுடன் அவர்களை கவனித்துக் கொள்ள வேண்டும், பள்ளிக் கல்வித்துறையைச் சார்ந்தவர்கள் பொறுப்போடு நடந்து உடனடியாக அதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டும்.

மாணவர்களின் பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும். சாலை விபத்து, தனியார் பள்ளிகளின் வாகனங்கள் மூலமாக நிகழும் விபத்துக்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அனைத்து தேர்வுகளிலும் மாணவர்கள் கலந்து கொள்ளும் வகையில் ஆசிரியர்கள் அவர்களை தயார் செய்ய வேண்டும். மழைக்காலங்களில் பள்ளி கட்டிடங்கள் பழுதடைந்திருந்தால் அதை உடனடியாக சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். காலாண்டு தேர்வுக்கான அனைத்து வேலைகளையும் முன்கூட்டியே திட்டமிட்டு முடிக்க வேண்டும்” என்று கூறினார்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours