அவிநாசி அருகே கார் டயர் வெடித்ததால் ஏற்பட்ட விபத்தில் சென்னையைச் சேர்ந்த பிரபல இசையமைப்பாளர் தஷி உள்ளிட்ட இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
சென்னையைச் சேர்ந்த இசையமைப்பாளர் தஷி என்கிற சிவக்குமார், நாகராஜ், மூவேந்திரன் மற்றும் ஆஸ்திரேலியா வாழ் தமிழரான தமிழ் அடியான் ஆகிய நான்கு பேரும் காரில் கேரளா சென்று விட்டு நேற்று மதியம் சென்னையை நோக்கி திரும்பிக் கொண்டிருந்தனர்.
திருப்பூர் மாவட்டம் பழங்கரை பகுதி அருகே வந்து கொண்டிருந்த போது காரின் முன்பக்க டயர் திடீரென்று வெடித்தது. இதில் நிலை தடுமாறிய கார் சாலையின் பக்கவாட்டில் இருந்த சுவற்றில் மோதி விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் ஆஸ்திரேலியாவில் வசித்து வந்த சென்னையைச் சேர்ந்த தமிழ் அடியான் என்பவருக்கும், கேரளா அரசின் சிறந்த இசையமைப்பாளர் விருது பெற்ற இசையமைப்பாளர் தஷி என்கிற சிவக்குமாருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும் காரில் பயணம் செய்த இயக்குநர் மூவேந்திரன், ரியல் எஸ்டேட் அதிபர் நாகராஜ் ஆகிய இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த அவிநாசி போலீஸார் இருவரையும் சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் திருமுருகன் பூண்டியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அத்துடன் உயிரிழந்த இசையமைப்பாளர் தஷி, தமிழ் அடியான் ஆகிய இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அவிநாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
+ There are no comments
Add yours