சின்னத்திரை நடிகை சித்ரா மரண வழக்கு விசாரணையை ஆறு மாதங்களில் முடிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த 2020 ஆம் ஆண்டு உணவக அறையில் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், அவரது கணவர் உள்ளிட்டோர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு திருவள்ளூர் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கை சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றி, விரைந்து முடிக்க உத்தரவிட கோரி சித்ராவின் தந்தை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், தன் மீதான குற்றப்பத்திரிகையை ரத்து செய்யக் கோரி ஹேம்நாத் தொடர்ந்த மனுவை கடந்த ஆண்டு தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம், விசாரணையை விரைந்து முடிக்க உத்தரவிட்டும் விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், விசாரணையை இழுத்தடிக்கும் நோக்கில் வேண்டுமென்றே ஹேம்நாத் பல்வேறு மனுக்களை தாக்கல் செய்துவருவதாகவும், 2021ம் ஆண்டிலிருந்தே வழக்கின் விசாரணை குற்றச்சாட்டுப் பதிவு செய்யும் கட்டத்திலேயே இருப்பதாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று இந்த மனுவை விசாரித்த நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ், இவ்வழக்கின் விசாரணையை சென்னை அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்ற மறுத்ததோடு, வழக்கின் விசாரணையை ஆறு மாதங்களில் முடிக்க திருவள்ளூர் மகளிர் நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.
+ There are no comments
Add yours