விருதுநகர்: மூளைச்சாவு அடைந்த பட்டாசு தொழிலாளியின் உடல் உறுப்புகள் விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு தானமாக இன்று வழங்கப்பட்டது.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள மேட்டமலையைச் சேர்ந்தவர் ராமர் (47). இவரது மனைவி துளசிமணி (37). இவர்களுக்கு காளீஸ்வரி (15) என்ற மகளும், முகில் பாண்டி (5) என்ற மகனும் உள்ளனர். பட்டாசுத் தொழிலாளியான ராமர், கடந்த மாதம் 30-ம் தேதி சாலை விபத்தில் சிக்கி பலத்த காயமடைந்தார். இதையடுத்து இவர் சாத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
ராமருக்கு மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டதால் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. ஆனால், சிகிச்சை பலனின்றி ராமர் மூளைச்சாவு அடைந்தார். மருத்துவர் குழு ராமர் மூளைச்சாவு அடைந்ததை நேற்று உறுதிசெய்து அறிவித்தது. அதையடுத்து, அவரது குடும்பத்தினரின் முழு சம்மதத்தின் பேரில் ராமர் உடல் உறுப்புகள் இன்று தானமாக வழங்கப்பட்டன. அப்போது, மருத்துவர்கள், செவிலியர்கள் பலர் மெழுகுவர்த்தி ஏந்தி ராமரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
அதையடுத்து, மூளைச்சாவு அடைந்த ராமர் உடலிலிருந்து இன்று கண்கள், கல்லீரல், சிறுநீரகங்கள், தோல் ஆகியவை தானமாக பெறப்பட்டு அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டன. இவை மதுரை, திருச்சி, தூத்துக்குடியில் உள்ள 6 பேருக்கு வழங்கப்பட உள்ளது. உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்ட பின்னர், ராமரின் உடல் அவரது குடும்பத்தினர் மற்றும் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் ஜெயசிங் வழிகாட்டுதலின்படி மருத்துவர்கள் சையத் பஹாவூதீன் உசேனி, சேகர், மருத்துவமனை கண்காணிப்பாளர் லதா, உதவி நிலைய மருத்துவ அலுவலர் முகமது சுல்தான் இப்ராகிம், டிரான்ஸ்டன் ஒருங்கிணைப்பாளர் ஜெகப்பிரியா ஆகியோர் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
+ There are no comments
Add yours