அலட்சிய போக்கில் இந்திய ரயில்வே நிர்வாகம் செயல்படுவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்பி சு.வெங்கடேசன் குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளார்.
மதுரை நாடாளுமன்ற உறுப்பினரும் ரயில்வே துறையில் அலோசகர் குழு உறுப்பினருமான சு.வெங்கடேசன் கடலூர் மாவட்டத்திற்கு சனிக்கிழமை வருகை தந்தார். பின்னர் கடலூர் திருப்பாப்புலியூர் ரயில் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “மதுரையில் நடைபெற்ற ரயில்வே விபத்தில் ஒன்பது பேர் இறந்துள்ளனர். 8 பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இறந்தவர்களுக்கு இரங்கலை தெரிவித்துக் கொள்கின்றேன்.
விபத்துக்குள்ளான இரயிலை கடந்த பத்து நாட்களாக எந்த ரயில்வே ஸ்டேஷனிலும், ரயில் நிலைய சந்திப்பிலும் ஆய்வு செய்யவில்லை. ரயில்வே பாதுகாப்பு துறைக்கு சுற்றுலா பயணிகள் பெட்டிகளை ஆய்வு செய்ய வழிமுறைகள் சொல்லப்படவில்லை. இரயில்வே துறையின் அலட்சியத்தால் நடந்த இந்த விபத்து மிகுந்த வேதனையாக உள்ளது.
இந்த விபத்து ரயில் பயணத்தின் பொழுது நிகழ்ந்திருந்தால் எவ்வளவு பெரிய விபத்தாக மாறி இருக்கும், ரயில் நிலையத்திற்கு வந்த பிறகு இந்த விபத்து நடந்துள்ளது. இது முழுவதுமாக ரயில்வே பாதுகாப்பு துரையினரின் தோல்வியை தான் காட்டுகிறது.
எனவே ரயில்வே பாதுகாப்புத் துறையை பலப்படுத்த வேண்டும். இத்துறையில், 10 ஆயிரம் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனை நிரப்பப்பட வேண்டும்” என தெரிவித்தார்.
மேலும், சுற்றுலா பயணிகள் பயணிக்கின்ற பெட்டிகளை பாதுகாப்பு சோதனைகள் இடுவது சம்பந்தமாக தெளிவான வழிகாட்டுதல்கள் இல்லை என தெரிவித்த அவர், ரயில் பெட்டிகளுக்குள் தீயணைப்பு கருவி ஏசி பெட்டிகளுக்கு மட்டுமே உள்ளதாகவும் ஏசி இல்லாத பெட்டிகளுக்குள் தீயணைப்பு கருவிகள் இல்லை எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
ரயில்வே நிர்வாகம் பயணிகள் பாதுகாப்பு விஷயத்தில் தொடர்ந்து அலட்சிய போக்கை கடைப்பிடித்து வருகிறது என குற்றம் சாட்டிய அவர், இரயில்வே துறையின் அலட்சியத்தால், இத்துறை சமீபத்தில் இரு பெரும் விபத்துக்களை சந்தித்து விட்டது எனவும் தெரிவித்தார்.
+ There are no comments
Add yours