நடிகர்கள் தனுஷ், சிம்பு, விஷால், அதர்வா ஆகியோருக்கு ரெட் கார்டு வழங்க தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க செயற்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நடிகர்கள் தனுஷ், சிலம்பரசன், விஷால், அதர்வா முரளி ஆகியோருக்கு ரெட் கார்டு நோட்டீஸ் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
சிம்பு மீது ஏற்கனவே பலமுறை புகார் அளித்து பேச்சுவார்த்தை நடத்தியும் முடிவடையாத மைக்கேல் ராயப்பன் பிரச்சனையை மேற்கோள்காட்டி அவருக்கு ரெட் கார்டு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தயாரிப்பாளர் சங்க தலைவராக இருந்த போது சங்க பணத்தை முறையாக வரவு செலவு கணக்கு வைக்காதது தொடர்பாக விஷாலுக்கு ரெட் கார்டு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதே போல நடிகர் தனுஷ், தேனாண்டாள் முரளி தயாரிக்கும் படத்தில் ஏற்கனவே 80 சதவீத படப்பிடிப்பு முடிந்த நிலையில் படப்பிடிப்புக்கு வராமல் தயாரிப்பாளருக்கு நஷ்டம் ஏற்படுத்தியதாக ரெட் கார்டு வழங்கவும், தயாரிப்பாளர் மதியழகன் கொடுத்த புகாரில் முறையாக பதில் அளிக்காமல் நழுவுவதால் அதர்வா முரளிக்கு ரெட் கார்டு வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே தயாரிப்பாளர் சங்க பொதுக்கூட்டத்தின் போது அவர்கள் மீது பகிரங்கமான புகார்கள் தெரிவிக்கப்பட்டது. பல படங்களில் அவர்கள் ஒப்பந்தமாகி, அதற்கான அட்வான்ஸ் தொகையை பெற்றுக்கொண்டு படத்தில் நடிக்காமல் தயாரிப்பாளர்களுடன் பிரச்சனைகளில் ஈடுபட்டதாகவும் இது தொடர்பாக பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும் ஒத்து வராததால் அவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தயாரிப்பாளர்கள் புகார் தெரிவித்தனர்.
இந்த நிலையில் இந்த புகார் நேற்று நடைபெற்ற தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க செயற்குழு கூட்டத்தில் பரிசீலனை செய்யப்பட்டு, நடிகர்கள் தனுஷ், விஷால், சிலம்பரசன், அதர்வா முரளி ஆகியோருக்கு ரெட் கார்டு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
+ There are no comments
Add yours