சிந்தனைக்களம்: சனாதனத்தை ஒரு நாளும் ஒழிக்க முடியாது!

Spread the love

‘ஆம்படையான் அடிச்சாலும் அடிச்சான், கண் பூளை கலைஞ்சது’ என்று ஒரு பழமொழி சொல்வது உண்டு. அப்படித்தான், தமிழக அரசின் காலை சிற்றுண்டி திட்டம் பற்றி, ‘தினமலர்’ நாளேட்டின் ஈரோடு, சேலம் பதிப்பு செய்திக்குப் பின், சனாதனம் பற்றிய விவாதம் இன்னொரு முறை எழுந்திருக்கிறது.
சனாதனம் பற்றி பேசுவதற்கு நான், தகுதியானவன் இல்லை. தகுதியானவர்கள் அமைதியாக இருப்பதாலும், எல்லாரும் பேச ஆரம்பித்து விட்டதாலும், நாமளும் எழுதி வைப்போமே என்பதே இந்தக் கட்டுரை.இன்னொரு காரணமும் இருக்கிறது. அது, பா.ஜ., பற்றிய விமர்சனமாக இருந்தால் அவர்கள் பதில் சொல்லட்டும் என விட்டு விடலாம்; அ.தி.மு.க., மீதான குற்றச்சாட்டாக இருந்தால், பழனிசாமி பார்த்துக் கொள்வார் என அமைதியாகலாம். இது, சனாதனம் சம்பந்தப்பட்ட விஷயம் என்பதால், ஒவ்வொரு ஹிந்துவும் பேச வேண்டும் என நினைக்கிறேன்.

சனாதனம் என்றால் என்ன என்று நான் சொன்னால், சண்டைக்கு வருவர். ஜாதி, மதம், எழுதுகிற நாளேடு எல்லாமே வம்புக்கு உள்ளாகும். அதனால், ஆரிய, வந்தேறி, பார்ப்பனர்கள் நடத்துகிற விக்கிப்பீடியா என்ன சொல்கிறது என தேடிப் பார்த்தேன்.

Santana Dharma – is an endonym used by Hindus to refer to Hinduism.

அதாவது, சனாதன தர்மம் என்பது இந்து மதத்தை குறிப்பிடுவதற்கான வார்த்தை என அர்த்தம்.

சரி, அவர்கள் ஒருவேளை பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் கையாளாக இருக்கலாம் என்பதால், இந்த Britannica என்ன சொல்கிறது என எட்டிப் பார்த்தேன்.

Sanatana Dharma, in Hinduism, term used to denote the ‘eternal’ or absolute set of duties or religiously ordained practices incumbent upon all Hindus, regardless of class, caste, or sect.

அதாகப்பட்டது, சனாதன தர்மம் என்பது பிரிவு, ஜாதி, இனம் என்ற எந்த பாகுபாடும் இல்லாமல், ஹிந்துக்களால் கடைபிடிக்கப்படும் நிலையான அல்லது முழுமையான கடமை மற்றும் மத வழக்கம்.

அடப்பாவமே… அவர்களுமே இந்து மதத்தின் பூர்வீகப் பெயர் தான் சனாதனம் எனச் சொல்லிவிட்டார்களே… அமித் ஷா வேலையாக இருக்குமோ என அஞ்சி, சுப்ரீம் கோர்ட் ஏதாவது சொல்லி இருக்கிறதா என்று பார்த்தேன்…

இந்த ஆண்டு பிப்ரவரியில் நீதியரசர் நாகரத்னா, ‘Hinduism is a way of life. Because of that India has assimilated everybody. Because of that we are able to live together’ என, ஒரே போடாக போட்டுவிட்டார்.

‘ஹிந்து மதம் என்பது ஒரு வாழ்க்கை முறை. அதனால் தான் இந்தியா எல்லாரையும் அரவணைக்கிறது. அதனால் தான் நாமெல்லாம் ஒற்றுமையாக வாழ முடிகிறது’ என்று இதற்கு அருஞ்சொற்பொருள். அவரும் பா.ஜ., தான் என யாரும் சொல்ல மாட்டார்கள் என நினைக்கிறேன்.

இப்படி கல் தோன்றி மண் தோன்றா காலத்து முன் தோன்றிய மூத்த மதத்தை ஹிந்து மதம் எனக் குறிப்பிடாமல் ஏன் இவர்கள் சனாதனம் என்றே அழைக்கின்றனர்?

  1. வழக்கு போட்டால் தப்பிக்கலாம்.
  2. யாரையோ சொல்வதாக அப்பாவி மக்கள் நினைத்துக் கொள்வர்.
  3. அப்போது தான், ‘சனாதனத்தை ஒழிக்க வேண்டும்’ என்று பேசிவிட்டு, ‘நான் எந்த மதத்துக்கும் எதிராக பேசவில்லை’ என சொல்ல முடியும்.

அதையெல்லாம் விடுங்கள்…

ஹிந்து மதத்தை இழிவுபடுத்துவது, தமிழகத்தில் காலம் காலமாக நடப்பது தானே… அப்போதெல்லாம் உணர்ச்சிவசப்படாதவர்கள், திடீரென துாங்கி எழுந்து, இந்திரா காந்தி இறந்துவிட்டாரா என ‘ஷாக்’ ஆவது ஏன்? என்று ஒரு கேள்வி வரலாம்.

இதற்கு முன்னர் இருந்தவர்கள் எல்லாம், அரசு பதவியில் இருந்தவர்கள் இல்லை அல்லது, அரசு பதவியில் இருந்தபோது பேசியதில்லை. இப்போது, ஒரு அமைச்சரின் முன்னிலையில் இன்னொரு அமைச்சரே பேசியதால் தான் இவ்வளவு பரபரப்பும்.

சரி, பேச்சுக்கு வருவோம்!

சனாதனம் எதிர்க்கப்பட வேண்டியது அல்ல; ஒழிக்கப்பட வேண்டியது.

சூப்பர். அப்படியானால், ‘இந்தியா’ கூட்டணியின் அடுத்த கூட்டத்தில் இது ஒரு தீர்மானமாக நிறைவேற்றப்படுமா? பிரதான கூட்டணியாக இருந்து, மும்பை விருந்து வழங்கிய சிவசேனா… என்ன சேனா? சிவசேனா… இந்தக் கூற்றை ஏற்குமா?

சரி, எதனால் சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்? ஏனென்றால் அது வர்ணாசிரமத்தை வளர்க்கிறது; ஜாதியை துாக்கிப் பிடிக்கிறது என்கின்றனர்.

முதலில் வர்ணாசிரமத்தை பார்ப்போம். வர்ணாசிரமம், இந்து மதத்தில் அதிகாரப்பூர்வமாக உள்ளது தான். மறுப்பதற்கோ, மறைப்பதற்கோ இல்லை. ஆனால், இதை ஒரு அதிகாரப் படிநிலையாக தான் இந்து மதம் சொல்லி இருக்கிறதே தவிர, பாகுபாடாக குறிப்பிடவில்லை.

ஒரு கட்சியில், எப்படி தலைவர், துணைத் தலைவர்,பொதுச்செயலர், பொருளாளர், மாவட்ட தலைவர்,நகரச் செயலர் என வேறு வேறு பதவிகளுக்கு, வேறு வேறு அதிகாரங்களும் உரிமைகளும் இருக்கின்றனவோ, அது போல நான்கு வர்ணங்களுக்கு பொறுப்புகள் வழங்கப்பட்டன.

நான்கு வர்ணத்தவருக்கும் பூணுால் உண்டு என்பது, உங்களில் எத்தனை பேருக்குத் தெரியும்? இன்றளவும், ஆசாரி, செட்டியார், நாயுடு, வன்னியர் உள்ளிட்ட பல்வேறு சமுதாய மக்களை, நல்ல / பொல்லா நாட்களில் பூணுால் அணிவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

இந்த வர்ணங்கள், பிறப்பால் அமைக்கப்பட்டவை இல்லை. அவரவர் செய்யும் தொழிலால் வகுக்கப்பட்டவை. வேலை தெரிந்தவர்கள், தங்களுடைய தொழில் திறமையை, தங்களது குடும்பத்திற்கு மட்டுமே சொல்லிக் கொடுத்ததால், அந்தத் தொழில்கள் குலத் தொழில்களாக மாறின.

இப்போதும் கூட அரசியல் கட்சித் தலைவர்கள், தங்களுடைய குடும்பத்தினரை அடுத்த வாரிசாக கொண்டு வருவதைப் பார்க்கிறோம். அப்படி அவரவர் குடும்பத்திற்கு சொல்லிக் கொடுத்த தொழில்நுட்பத்தின் விளைவாகத் தான் இந்த வர்ணாசிரமம், பிறப்பு அடிப்படையில் மாறியது.

எல்லாரும் சமம் என்பது, எழுதவும் பேசவும் இனிப்பாக இருக்கும்; நடைமுறையில்அது சாத்தியமில்லை. ஒரே காரில் பயணிப்பதால், உரிமையாளரும் டிரைவரும் ஒன்றில்லை.

‘எங்களை என்ன தாழ்த்தப்பட்டவர் என்று நினைத்தார்களா?’ என்று, ஒரு முன்னாள் மத்திய அமைச்சர் பேசுகிறார். ‘பட்டியல் சமூகத்துக்கு நாங்கள் போட்ட பிச்சை’ என இன்னொரு பிரமுகர் பேசுகிறார். பாகுபாடு காட்டுவது சனாதனம் என்றால், இவர்களுடைய பேச்சு என்ன தனம் என தெரிந்து கொள்ள முயற்சிக்கிறேன்.

வர்ணாசிரமம் ஹிந்து மதத்தில் உள்ளது தான் என்று ஏற்கும் அதே நேரத்தில், ஜாதி பற்றி ஹிந்து மத நுால்கள் எவையேனும், எங்கேயும் பேசி இருக்கின்றனவா என அறிய விரும்புகிறேன்.

ஜாதி என்பது ஒரு மதம் சார்ந்து உருவானது அல்ல. அந்தந்த சமூக குழுக்கள், அவர்களுக்கு உள்ளாகவே உருவாக்கிக் கொண்டது.

அதனால்தான் நான்கு வர்ணங்களும், வடமொழி பெயரில் இருக்கும்; ஆனால் ஜாதிப் பெயர்கள் அந்தந்த மாநில மொழிகளில் இருக்கும். வன்னியர், நாடார், செட்டியார், முக்குலத்தோர் போன்றவை எல்லாம், வடமொழி பெயர்கள் என, யாரும் சொல்ல மாட்டார்கள் என நினைக்கிறேன்.

சரி, இந்த பாகுபாடு ஹிந்து மாதத்தில் மட்டும் தான் இருக்கிறதா? மற்ற மதங்களில் இல்லையா?

கிறிஸ்துவத்திலும் பாகுபாடு இருக்கிறது என, என்னுடைய நேர்காணலில், அருட் தந்தை ஜெகத் கஸ்பரே ஒப்புக்கொண்டார். இஸ்லாத்தில் பாகுபாடு இல்லை என்றால், பாகிஸ்தானிலும், ஆப்கானிஸ்தானிலும் ஏன் குண்டு வெடிக்கிறது என ஆராய்ச்சி செய்ய வேண்டும்.

எனவே, மதங்கள் பாகுபாடு காட்டுவதில்லை; மதத்தின் பெயரால் மனிதர்கள் பாகுபாடு காட்டுகின்றனர்.

அப்படியே ஹிந்து மதத்தில்ஏற்றத்தாழ்வு இருப்பது உண்மை என்றால், அந்த ஏற்றத்தாழ்வைத் தான் சரிசெய்ய வேண்டுமே தவிர, ஒட்டுமொத்த மதத்தையே அழிப்போம் என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது.

இந்த ஆண்டு ஆடி மாதம், சென்னை கோயம்பேடில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் நிகழ்ச்சியில், பாதுகாப்புக்கு நின்ற பெண் போலீசுக்கே பாலியல் தொந்தரவு கொடுத்ததால், தி.மு.க., பிரமுகர் கண்ணன் என்பவர் கைது செய்யப்பட்டார். இப்போது கண்ணனை குற்றம் சொல்லாமல், ஒட்டுமொத்த தி.மு.க.,வையே ஒழிக்க வேண்டும் என யாராவது சொன்னால் ஏற்க முடியுமா?

சரி, சனாதானம் தான் பாகுபாடு பார்க்கிறது என்றால், அதே மேடையில் இருந்த பீட்டர் அல்போன்சை, காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆக்காததற்கு என்ன காரணம்? அவரே என் நேர்காணலில் குறிப்பிட்டிருக்கிறார், நான் கிறிஸ்துவன் என்பதால் தான், மாநிலத் தலைவர் ஆக்கப்படவில்லை என!

சரி, ராமானுஜர் சனாதனவாதியா இல்லையா? அவரைப்பற்றி எதற்காக, ராமானுஜ காவியம் எழுதப்பட்டது?

சனாதனத்துக்கு வக்காலத்து வாங்கும் பா.ஜ.,வில் அகில இந்தியத் தலைவராக ஒரு பட்டியலினத்தவர் இருந்திருக்கிறார். பட்டியலினத்தவர்கள் இரண்டு பேர், மாநிலத் தலைவர் ஆக்கப்பட்டிருக்கின்றனர். சனாதனத்தை ஒழிக்கக் குரல் கொடுக்கும் கட்சியில் அது சாத்தியமா?

சனாதனத்தை ஒழிக்க வேண்டுமென்றால், அவற்றின் ஆணி வேராக இருக்கும் கோவில்களில் மூக்கை நுழைப்பது ஏன்? அறநிலையத் துறையை கலைத்துவிட வேண்டியது தானே?

சனாதனம் என்றால், அழியாதது என்று அர்த்தம். முடிவில்லாதது என்று பொருள். எப்போதும் இருப்பது. சந்திர சூரியர்கள் உள்ளவரை இருக்கும்.

கடந்த, 1323இல், திருவரங்கத்தில் உல்லுக் கான், 12,000 வைஷ்ணவர்களின் தலையைத் துண்டித்த பின்னரும், சனாதனம் இருந்தது. அவுரங்கசீப் ஆட்சிக் காலத்தில், இந்துவாக இருப்பதற்கே ‘ஜிஸ்யா’ வரி விதித்தபோதும், சனாதனம் இருந்தது.

சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் கட்டிய அரண்மனை இல்லை; சனாதனத்தின் சாட்சியாக, அவர்கள் கட்டிய கோவில்கள் இருக்கின்றன.

சர்வே ஜனா சுகினோ பவந்து (எல்லா உயிர்களும் இன்புற்று இருக்கட்டும்) என சொல்லிக்கொடுத்த உபநிஷதம், சனாதானத்தின் அடையாளம்.

‘வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்’ என்ற வள்ளலார், சனாதனத்தின் உச்சம்.

‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என தமிழிலும், வசுதைவ குடும்பகம் (உலகமே ஒரு குடும்பம்) என வடமொழியிலும் சொல்லிக் கொடுத்தது சனாதனம்.

‘கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின்’ என கேள்வி எழுப்பிய வள்ளுவம், சனாதனத்தின் சாட்சி.

அடியேன் என்றும், தாசன் என்றும், தொண்டரடிப்பொடி என்றும், சிவனடியார் என்றும், பணிவைச் சொல்லிக் கொடுத்தது சனாதனம்.

அன்பே சிவம் என்பது சனாதனம்.

அன்பே தகளியா ஆர்வமேநெய்யாக இன்புருகு சிந்தை இடுதிரியா – நன்புருகி ஞானச் சுடர் விளக்கு ஏற்றியது சனாதனம்.

நிற்க.

தான் ஒரு கிறிஸ்துவன் எனக் கூறிக்கொள்வதில் பெருமை கொள்கிறேன் என்ற அமைச்சர் உதயநிதியும், பெருமைக்குரிய கிறிஸ்துதவராக இருக்கும் பீட்டர் அல்போன்சும், ஹிந்து சமய அறநிலையத் துறை அமைச்சரும் அந்த மேடையில் இருந்தது கவனிக்க வேண்டிய விஷயம்.

அதை விட முக்கியமான விஷயம், அந்த மாநாட்டை நடத்தியவர்கள். த.மு.எ.க.ச., என்றழைக்கப்படும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம். இவர்களுடைய குழுமம் தான் தமிழக அரசோடு இணைந்து புத்தகத் திருவிழாக்களை நடத்தி வருகின்றன.

ஆக, இவர்களுடைய நோக்கம் தெளிவாகிவிட்டது. அது நடக்கப்போவதில்லை என்பதும் உறுதியாகிவிட்டது.

ஏனென்றால் இது சனாதானம்!

ஆர்.ரங்கராஜ் பாண்டே, பத்திரிகையாளர்,
‘சாணக்யா – யு டியூப் சேனல்’ நிறுவனர்


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours