சாத்தான்குளம் காவல்நிலையத்தில் தந்தை, மகன் உயிரிழந்த வழக்கில் ஆய்வாளர் ஸ்ரீதர் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. கடந்த 2022ம் ஆண்டில் சாத்தான்குளத்தை சேர்ந்த வியாபாரி ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் சாத்தான்குளம் போலீஸாரால் விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்தனர்.
இது தொடர்பாக சிபிஐ கொலை வழக்கு பதிவு செய்து, காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், பாலகிருஷ்ணன், ரகு கணேஷ் மற்றும் ஒரு சிறப்பு சார்பு ஆய்வாளர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு மதுரை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த விசாரணையை விரைவில் முடிக்கக்கோரி ஜெயராஜ் மனைவி செல்வராணி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.
அதன்படி, சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கை விசாரிக்க மேலும் 3 மாத அவகாசம் வழங்கி உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டது. இதனிடையே, உடல்நல குறைவு காரணமாக சிகிச்சை பெற வேண்டும் என்பதால் ஜாமீன் வழங்க கோரி உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் ஸ்ரீதர் மனு தாக்கல் செய்திருந்தார்.
ஜாமீன் மனு மீதான விசாரணையில் இரு தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில், ஆய்வாளர் ஸ்ரீதர் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து உயர்நீதிமன்ற மதுரை கிளை. காவல் ஆய்வாளர் ஸ்ரீதருக்கு ஜாமீன் வழங்க உயிரிழந்தவர்களின் உறவினர்கள் மற்றும் சிபிஐ மற்றும் அரசு தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
மேலும், நவம்பர் மாதத்திற்குள் சாத்தான்குளம் வழக்கு நிறைவடையும் என சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சாத்தான்குளம் வழக்கில் இதுவரை 48 சாட்சிகளிடம் விசாரணை நடந்து முடிந்துள்ளது எனவும் கூறியுள்ளனர். இதனிடையே, சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில், கைதான முன்னாள் காவல் உதவி ஆய்வாளர் ரகு கணேஷின் ஜாமீன் மனுவை 5வது முறையாக தள்ளுபடி செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
+ There are no comments
Add yours