நடிகை விஜயலட்சுமி அளித்த புகாரின் பேரில், இன்று நேரில் ஆஜராக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு, சென்னை காவல்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
திருமணம் செய்துகொள்வதாக கூறி ஏமாற்றிவிட்டதாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து புகார் கூறி வருகிறார். இதுதொடர்பாக அப்போதே வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பெரி சீமான் மீது போலீசார் வழக்கு பதிவு செய்த நிலையில் அவரை கைது செய்யவில்லை.
இந்த சமயத்தில், அண்மையில் சீமான் மீது நடவடிக்கை எடுக்க கோரி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திலும் நடிகை விஜய லட்சுமி மீண்டும் புகார் அளித்திருந்தார். அதில், கடந்த 2008ம் ஆண்டு சீமான் மதுரையில் தன்னை திருமணம் செய்து கொண்டார். 2011-இல் பணம், நகைகளை பறித்துக் கொண்டு மோசடி செய்துவிட்டார். அதுமட்டுமில்லாமல் 7 முறை சீமான் தன்னை கட்டாய கருக்கலைப்பு செய்ய வைத்தார் என பல்வேறு புகார்களை விஜயலட்சுமி கூறியதாக தகவல் வெளியாகியிருந்தது.
இதனால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. ஆனால், விஜய லட்சுமி புகார்களை சீமான் திட்டவட்டமாக மறுத்திருக்கிறார். அரசியல் காரணங்களுக்காகவும், தேர்தல் நெருங்கி வருவதால், தன்னை தேர்தல் பணியில் இருந்து திசை திருப்பவே இந்த புகார்கள் வைக்கப்படுகிறது என குற்றசாட்டினார். இதனிடையே, சீமான் மீது நடவடிக்கை எடுக்க கோரி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திலும் புகார் அளித்ததை அடுத்து, விஜயலட்சுமியிடம் சுமார் 8 மணிநேரம் போலீசார் விசாரணை நடத்தினர்.
பின்னர் முக்கிய ஆவணங்களை காவல்துறையிடம் விஜய லட்சுமி அளித்ததாகவும் கூறப்பட்டது. இதையடுத்து, திருவள்ளூர் மாஜிஸ்திரேட் முன்னிலையில் விஜயலட்சுமி ஆஜர்படுத்தப்பட்டு, அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. இந்த சமயத்தில், சீமான் கைது செய்யப்படலாம் எனவும் பரபரப்பான தகவலும் பரவியது. ஆனால், இந்த குற்றசாட்டை முழுவதும் மறுப்பு தெரிவித்து, உண்மையான குற்றசாட்டு என்றால், ஆதாரம் இருந்தால் என் மீது நடவடிக்கை எடுக்கலாம், இதற்கெல்லாம் பயப்படமாட்டேன். நானும் சட்டரீதியாக எதிர்கொள்வேன் என ஆவேசமாக பேசியிருந்தார்.
இதனைத்தொடர்ந்து, பரபரப்பான சூழலில், நடிகை விஜயலட்சுமியை போலீசார் மீண்டும் அழைத்து சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை நடத்தினர். கட்டாய கருக்கலைப்பு புகாரை தொடர்ந்து, நடிகை விஜயலட்சுமிக்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் 2 மணிநேரம் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதுதொடர்பாக 4 நாட்கள் கழித்து பரிசோதனை முடிவு வெளியாகும் என தகவல் வெளியாகியிருந்தது. பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில் காவல்துறை அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கவும் தயாராக உள்ளதாகவும் கூறப்பட்டது. சீமான் தன்னை 7 முறை கட்டாய கருக்கலைப்பு செய்ததாக விஜயலட்சுமி புகார் கூறியிருக்கிறார். இதன் உண்மைத் தன்மையை கண்டறிய மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது என்றும் காவல்துறை வட்டாரம் தெரிவித்தது.
அடுத்தகட்டமாக நடிகை விஜய லட்சுமிக்கு கருக்கலைப்பு செய்த மருத்துவர்கள் யார் என்று கண்டறிந்து அவர்களிடம் விசாரணை நடத்தவும், கருக்கலைப்பின் யாருடைய கையெழுத்து உள்ளது என்பது குறித்தும் விசாரிக்க காவல்துறை முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
எனவே, போலீஸ் விசாரணை, நீதிமன்றத்தில் வாக்குமூலம், மருத்துவ பரிசோதனை என விஜயலட்சுமி விவகாரத்தில் அடுத்தடுத்து நடவடிக்கைகள் தொடருவதால் சீமானுக்கு நெருக்கடி ஏற்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும், விஜய லட்சுமியின் விவகாரம் தொடர்பாக அடுத்தகட்ட விசாரணையில் போலீசார் தீவிரம் காட்டி வரும் நிலையில், உண்மை நிரூபிக்கப்பட்டால் சீமான் கைது செய்யப்படுவாரா எனவும் பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளது.
இதனிடையே, சீமான் நீலகிரிக்கு சென்றிருந்தார், அப்போது எனக்கு எந்த பிடி வாரண்டும் வரவில்லை. நான் ஏன் விசாரணைக்கு பயப்பட வேண்டும், நாமெல்லாம் பயப்படுற ஆளா என கூறியிருந்தார். இந்த நிலையில், விஜயலட்சுமியிடம் விசாரணை நடைபெற்ற நிலையில், சீமான் இன்று காலை 10.3o மணி அளவில் வளசரவாக்கம் காவல்நிலையத்தில் விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பட்டுள்ளது.
+ There are no comments
Add yours