ராஜபாளையம்: “விசிக மது ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்பதில் எனக்கு ஐயமில்லை. மாநாட்டுக்கு அதிமுகவை விசிக அழைப்பதை வரவேற்கிறேன். ஆனால், பாஜக மதவாத கட்சி, பாமக சாதி கட்சி என்கிற திருமாவளவன், மதுவாத கட்சியான திமுகவுடன் எப்படி கூட்டணி வைத்துள்ளார்? என்று சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
ராஜபாளையத்தில் இன்று (செப்.12) விருதுநகர் மாவட்ட நாம் தமிழர் கட்சி செயற்குழு கூட்டம் நடைபெற்றது. கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இதில் கலந்து கொண்டார். அப்போது அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: “வருகிற உள்ளாட்சி தேர்தல் மற்றும் 2026 சட்டப்பேரவை தேர்தலுக்கான வேட்பாளர் தேர்வு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த ஆய்வு செய்வதற்காக கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. மக்களவைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு வாக்களித்த 36 லட்சம் பேரில் புதிய வாக்காளர்கள் மற்றும் மாற்றத்தை விரும்பும் வாக்காளர்கள் அதிகளவில் உள்ளனர். எங்களது கருத்தியலை மையமாக கொண்டே வாக்காளர்கள் உள்ளனர்.
சாதி, மதம், சாராயம், பணம், திரைக் கவர்ச்சி ஆகியவை நல்ல அரசியலை முன்னெடுக்க தடையாக உள்ளது. பாஜகவுடன் கூட்டணி வைத்தவர்களுக்கு மட்டும் சின்னம் ஒதுக்கப்பட்டது. ஆனால் எங்களுக்கு சின்னம் ஒதுக்கவில்லை. விசிக மது ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்பதில் எனக்கு ஐயமில்லை. மாநாட்டுக்கு அதிமுகவை விசிக அழைப்பதை வரவேற்கிறேன். ஆனால், பாஜக மதவாத கட்சி, பாமக சாதி கட்சி என்கிற திருமாவளவன், மதுவாத கட்சியான திமுகவுடன் எப்படி கூட்டணி வைத்துள்ளார்?
சாதி வாரி கணக்கெடுப்பு பாஜகவின் கொள்கைகளுக்கு எதிரானது. மத்திய அரசு தான் சாதிவாரி கண்கெடுப்பை நடத்த வேண்டும் என ஸ்டாலின் கூறுவது ஏமாற்று வேலை. இட ஒதுக்கீடு என்பது சலுகை அல்ல; உரிமை. மது விலக்கு மாநாடு நடத்துவது காலம் கடந்த முடிவு. சாதி வாரி கணக்கெடுப்பையும் மதுவிலக்கையும் அமல்படுத்துபவர்கள் உடன் மட்டுமே கூட்டணி வைப்போம் என ராமதாஸும், திருமாவளவனும் அறிவிக்கத் தயாரா?
தமிழகம் முழுவதும் உள்ள யாதவ சமூகத்துக்கு சிவகங்கை மாவட்டத்தில் மட்டும் இரண்டு பேருக்கு அமைச்சர் பொறுப்பு வழங்கிய முதல்வர் ஸ்டாலின் அவரது குடும்பத்துக்கு மட்டும் இரண்டு அமைச்சர் பதவிகளை வைத்துள்ளது என்ன சமூக நீதி? பட்டாசு தொழிலுக்கு பாதுகாப்பு கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டும். வேளாண் சார்ந்த தொழில்களை உருவாக்க வேண்டும். எண்ணெய் நிறுவனங்களே விலையை தீர்மானித்துக் கொள்ளும் அதிகாரம் வழங்கியதால் கச்சா எண்ணெய் விலை குறைந்தும், பெட்ரோல், டீசல் விலை குறையவில்லை.” என்று அவர் கூறினார். இந்தப் பேட்டியின் போது நாதக மாநில ஒருங்கிணைப்பாளர் மதிமாறன், மாவட்டச் செயலாளர் ஜெயராஜ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
+ There are no comments
Add yours