மதுரை: மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தை பராமரிக்க போதுமான தூய்மைப்பணியாளர்கள் இல்லாமல் தூர்நாற்றம் வீசுகிறது. இதனால் பயணிகள் பேருந்துக்காக காத்திருக்க முடியாமல் பரிதவிக்கிறார்கள்.
தென் தமிழகத்திலேயே மிகப்பெரிய பேருந்து நிலையமாக, மதுரை மாட்டுத்தாவணி ஒருங்கிணைந்த எம்ஜிஆர் பேருந்து நிலையம் செயல்படுகிறது. இந்த பேருந்து நிலையத்தை கடந்த 1999ம் ஆண்டு மே 25ம் தேதி அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி திறந்து வைத்தார். தமிழகத்திலே ஐஎஸ்ஓ தரச்சான்று பெற்ற ஒரே பேருந்து நிலையமாக இது செயல்பட்டு வந்தது.
அதன்பிறகு, திமுக, அதிமுக ஆட்சிகளிலே இந்தப் பேருந்து நிலையம் முறையாக பராமரிக்கப்படவில்லை. அதனால், ஐஎஸ்ஓ தரச்சான்று அந்தஸ்தை இந்த பேருந்து நிலையம் இழந்தது. இலவச கழிப்பறைகள், கட்டணக் கழிப்பறைகளாக மாற்றப்பட்டன. அவையும் சரியாக பராமரிக்கப்படாததால், இரவு நேரங்களில் பயணிகள், திறந்த வெளியில் சிறுநீர் கழிக்கின்றனர், உடனுக்குடன் அள்ளப்படாததால் குப்பைகள் தேக்கமடைகிறது.
பேருந்து நிலையம் வளாக சாலைகள், சிதிலமடைந்து கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக காணப்படுகின்றன. பேருந்து நிலையத்தை ஓட்டி, இரு சக்கர வாகனங்களை விடுவதற்கு கட்டண பார்க்கிங் இருந்தும், வாகனங்களை பலரும் பேருந்து நிலைய வளாகத்திலேயே நிறுத்திச் செல்கிறார்கள். இதனால் திரும்பிய பக்கமெல்லாம் இரு சக்கர வாகனங்கள் நிற்பதால் பேருந்து நிலைய வளாகமே, இரு சக்கர வாகன காப்பகம் போல் காணப்படுகிறது. அல்ட்ரா டீலக்ஸ் விரைவு பேருந்துகள் வந்து நிற்கும் இடத்தில் தொலைதூரங்களுக்குச் செல்லும் பயணிகள் காத்திருக்க போதுமான இருக்கைகள் இல்லை. அதனால், மாற்றுத்திறனாளிகள், பெண்கள், வயதானவர்கள் நீண்ட நேரம் நிற்க முடியாமல் சிரமப்படுகிறார்கள்.
மேலும், பேருந்து நிலையத்தை பராமரிக்க நிரந்தரமாக அங்கே ஷிஃப்ட் அடிப்படையில் பணிபுரிய போதுமான தூய்மைப்பணியாளர்கள் இல்லை. எனவே, காலை நேரத்தில் மட்டுமே பேருந்து நிலையம் தூய்மைப்படுத்தப்படுகிறது. அதன்பிறகு பணிக்கு ஆட்கள் இல்லாததால் பேருந்து நிலையப் பகுதி சுகாதார சீர்கேடு அடைகிறது. கழிப்பறைகள் முறையாக பராமரிக்கப்படாததால் இரவில் கழிவு நீரின் நெடி பேருந்து நிலைய வளாகம் முழுவதும் வீசுகிறது.
மேலும், அருகில் உள்ள மீன் மார்க்கெட் கழிவுகளும் முறையாக அள்ளப்படாததால் மீன் மார்க்கெட்டை ஒட்டிய பகுதியில் பயணிகள் பேருந்துக்காக காத்திருக்க முடியாத அளவிற்கு தூர்நாற்றம் வீசுகிறது. இந்த மீன் மார்க்கெட் ஆரம்பத்தில் கரிமேட்டில் செயல்பட்டு வந்தது. கரோனா காலத்தில் தற்காலிகமாக இங்கு செயல்பட தொடங்கியது. அதன்பிறகு கரோனா காலம் முடிந்த பிறகும், இங்கேயே மார்க்கெட்டை நிரந்தரமாக்கிவிட்டார்கள். முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியால் திறந்துவைக்கப்பட்ட இந்த பேருந்து நிலையத்தை, அவரது மகன் ஸ்டாலின் ஆட்சி நடக்கும் காலத்திலேயே இப்படி கண்டும் காணாமல் விட்டிருப்பது பயணிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தின் சுகாதாரச் சீர்கேடுகள் குறித்து நம்மிடம் பேசிய 2வது மண்டல தலைவர் சரவண புவனேஷ்வரி, ‘‘மீன் கடைகள் 2வது மண்டலத்திற்குட்பட்ட மாட்டுத்தாவணியில் செயல்படுகிறது. ஆனால், கரிமேட்டில் செயல்பட்ட அடிப்படையிலே மீன்மார்க்கெட் கடைகளுக்கான வாடகையை மாநகராட்சி 3வது மண்டல அலுவலகத்தில் வசூல் செய்கிறார்கள். ஆனால், அவர்கள் தூய்மைப்பணி செய்வதற்கு தூய்மைப்பணியாளர்களை அனுப்புவதில்லை. நாங்கள்தான், வழக்கமான வார்டு தூய்மைப்பணியை முடித்த பிறகு மீன் மார்க்கெட்டை சுத்தம் செய்ய பணியாளர்களை அனுப்புகிறோம்.” என்றார்.
மேலும், “பலமுறை மீன் மார்க்கெட்டை இங்கிருந்து இடமாற்றம் செய்வதற்கு மாநகராட்சி ஆணையாளரிடம் சொல்லிவிட்டோம். தற்போது அதற்கான பேச்சுவார்த்தை நடக்கிறது. விஐபி-க்கள் அடிக்கடி 2வது மண்டலத்திற்குட்பட்ட விருந்தினர் மாளிகை பகுதிக்கு வந்து செல்கிறார்கள். அதனால், விஐபி-க்கள் வரும்போதெல்லாம் தூய்மைப்பணியாளர்களை விஐபி வருகை சிறப்புப் பணிக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள். அதனால் அன்றைய தினத்தில் மற்ற இடங்களில் தூய்மைப்பணி பாதிக்கப்படுகிறது’’ என்றார்.
+ There are no comments
Add yours