சென்னை பல்கலைகழகம், கோவை பாரதியார் பல்கலைகழகம் மற்றும் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகத்துக்கு துணைவேந்தர்களை தேர்வு செய்ய புதிய குழுவானது அமைக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட 3 பல்கலைக்கழகங்களுக்கு துணை வேந்தர்களை நியமனம் செய்ய கமிட்டி அமைத்து ஆளுநர் ஆர்என் ரவி உத்தரவிட்டார்.
ஒவ்வொரு பல்கலைக்கழகங்களுக்கும் தலா நான்கு உறுப்பினர்களை கொண்ட தேர்வு குழுவானது அமைக்கப்பட்டுள்ளது. இதில் முதல் முறையாக யுஜிசியின் பிரதிநிதி துணை வேந்தர்கள் நியமன தேர்வு குழுவில் இடம்பெற்றுள்ளனர். பல்கலைக்கழக துணைவேந்தர்களை தேர்வு செய்யும் தேடுதல் குழுவில் யுஜிசி உறுப்பினர்களை சேர்க்க வேண்டிய கட்டாயம் இல்லை என தமிழ்நாடு அரசு முன்னதாக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு கடிதம் எழுதியிருந்தது.
இந்நிலையில், நேற்று தமிழக அரசின் வலியுறுத்தலையும் மீறி, தேர்வு குழுவில் யுஜிசியின் பிரதிநிதியை நியமித்து ஆளுநர் ரவி உத்தரவிட்டு இருந்தார். இந்த விவகாரத்தில், பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமிக்க ஆளுநர் தன்னிச்சையாக எடுத்த முடிவுக்கு எதிராக தமிழ்நாடு அரசு சட்டரீதியாக எதிர்கொள்ளும் என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆளுநர் ஆர்.என்.ரவியால் அமைக்கப்பட்டுள்ள இந்த தேர்வு குழு முழுக்க முழுக்க பல்கலைக்கழக சட்டத்திற்கும் மற்றும் தமிழக அரசு விதிமுறைகளுக்கும் முரணானது என தமிழக உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
+ There are no comments
Add yours