இளங்கோவன் மறைவுக்கு தமிழக தலைவர்கள் இரங்கல்

Spread the love

சென்னை: காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவுமான ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நலக் குறைவால் இன்று (டிச.14) காலை காலமானார். கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவு காரணமாக தீவிர சிகிச்சை பெற்றுவந்த அவரது உயிர் இன்று காலை 10.12 மணியளவில் பிரிந்தது என்று சிகிச்சை பெற்றுவந்த மருத்துவமனை தரப்பு தெரிவித்துள்ளது. ஈவிகேஎஸ் மறைவுக்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் தங்களது இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.

செல்வப்பெருந்தகை: “தந்தை பெரியாரின் பேரன் என்பதோடு, தமிழக காங்கிரசில் முக்கிய தலைவராக இருந்த சொல்லின் செல்வர் ஈ.வெ.கி. சம்பத்தின் மகன் என்ற பெருமை ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு உண்டு. இந்த பாரம்பரியத்தில் வந்த அவர், சமீபத்தில் ஈரோடு கிழக்கு, சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு அமோக வெற்றி பெற்றார். தமிழக காங்கிரஸ் தொண்டர்களால் தன்மானத் தலைவர் என்று அன்போடு அழைக்கப்பட்ட ஈவிகேஎஸ் இளங்கோவன் இழப்பு என்பது காங்கிரஸ் பேரியக்கத்திற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். தமிழக காங்கிரசின் ஒரு தூண் சாய்ந்து விட்ட உணர்வோடு மிகுந்த வேதனையில் இருக்கிறேன்” என்று பகிர்ந்துள்ளார்.

இரா.முத்தரசன்: “காமராஜர், கவிஞர் கண்ணதாசன், பழ நெடுமாறன், குமரி அனந்தன் போன்ற தலைவர்களின் மாறாத பாசத்தையும், அன்பையும் பெற்றவர். நடிகர் திலகம் சிவாஜி கணேசனுடன் நெருக்கமான நட்பு கொண்டிருந்தவர். கருணாநிதி, ஜெயலலிதா. கி.வீரமணி, வைகோ, நல்லகண்ணு, ஜி.கே மூப்பனார், சங்கரய்யா போன்ற அரசியல் தலைவர்களோடு இணைந்து செயல்பட்டவர். மத்திய அரசில் மத்திய ஜவுளித்துறை இணை அமைச்சராக பணியாற்றியவர். அந்த நேரத்தில் ஜவுளித் துறை நெருக்கடிக்கு காரணமாக இருந்த சென்வாட் வரி நீக்க பாடுபட்டவர். பழனி – சாம்ராஜ் நகர் ரயில் பாதை அமைப்பதற்கான ஆரம்ப நிலை பணிகளை தொடக்கி வைத்தவர்.” என்று நினைவு கூர்ந்துள்ளார்.

ஜி.கே.வாசன்: “ஈவிகேஎஸ் இளங்கோவன் தந்தை ஈவிகே சம்பத்தும், எனது தந்தை ஜி.கே.மூப்பனாரும் நெருங்கி பழகியவர்கள். அந்த வகையில், அந்த குடும்ப தொடர்பு இன்று வரை தொடர்கிறது. ஈவிகேஎஸ் இளங்கோவன் தனது மனதில் பட்டதை தைரியமாக பேசக்கூடியவர். தொண்டர்களுக்கு சோர்வு ஏற்படும் போதெல்லாம் அவர்களுக்கு, ஊக்கமளித்து உற்சாகப்படுத்துபவர். அவரது இழப்பு தமிழக காங்கிரஸ் கட்சிக்கும், தமிழகத்துக்கும் பேரிழப்பாகும்,” என்று கூறியுள்ளார்.

அன்புமணி ராமதாஸ்: “தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத பங்களிப்பு செய்த தலைவர்களில் ஈவிகேஎஸ் இளங்கோவனும் ஒருவர். ஒரு மாதத்துக்கும் மேலாக மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த அவர், நலம் பெற்று வீடு திரும்புவார் என எதிர்பார்த்திருந்த வேளையில் அவரது மறைவுச் செய்தி மனதை வாட்டுகிறது. அவரது மறைவு காங்கிரஸ் கட்சிக்கும், அவரது குடும்பத்துக்கும் பேரிழப்பாகும்,” என்று இரங்கல் தெரிவித்துள்ளார்.

வைகோ: “காங்கிரஸ் இயக்கத்தின் சுயமரியாதை தலைவர் என்று சொல்லத்தக்க அளவுக்கு காங்கிரஸ் கட்சியில் தன்னை முழுவதுமாக ஒப்படைத்துக் கொண்டு, தமிழகத்தில் கட்சியை வழிநடத்துகின்ற தலைவராக உயர்ந்தவர். தமிழகத்தில் மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணியை வலிமையோடு எடுத்துச் செல்வதற்கு எவருக்கும் அஞ்சாமல் கருத்துக்களை முன்வைத்த சிறப்பு அவருக்கு உண்டு. கடந்த மாதம் இறுதியில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது எப்படியும் குணமாகி மீண்டு வருவார் என்று நம்பிக்கையுடன் இருந்தேன். ஆனால் அவர் மூச்சுக்காற்று இயற்கையோடு கலந்துவிட்டது” என்று இரங்கல் தெரிவித்துள்ளார்.

விஜய்: “மிகப்பெரிய அரசியல் பாரம்பரியத்தைக் கொண்டவரும், தந்தை பெரியாரின் குடும்பத்தைச் சேர்ந்தவரும், தற்போதைய ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நலக்குறைவால் காலமான செய்தியறிந்து மிகுந்த மன வேதனை அடைந்தேன். அவரைப் பிரிந்து வாடும் குடும்பத்தினர் மற்றும் காங்கிரஸ் கட்சியினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்,” என்று இரங்கல் தெரிவித்துள்ளார்.

டிடிவி தினகரன்: “சுமார் 40 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத தலைவராக திகழ்ந்த ஈவிகேஎஸ் இளங்கோவனை இழந்து வாடும் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

எல்.முருகன்: “ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும், தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் கமிட்டி தலைவருமான, மதிப்புக்குரிய ஈவிகேஎஸ் இளங்கோவன், உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது. சிறு வயதிலிருந்தே அரசியல் பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர், முன்னாள் மத்திய அமைச்சராகவும், தற்போது சட்டமன்ற உறுப்பினராகவும் மக்கள் பணியாற்றி வந்தார்” என்று தெரிவித்துள்ளார்.

ஓ.பன்னீர்செல்வம்: “மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் தீவிர ரசிகரான இளங்கோவன், தன்னுடைய கருத்தினை துணிச்சலாக தெரிவிக்கும் ஆற்றல் படைத்தவர். மக்களவை உறுப்பினராகவும், சட்டமன்ற உறுப்பினராகவும், மத்திய அமைச்சராகவும் திறம்பட பணியாற்றியவர். இவருடைய இழப்பு காங்கிரஸ் கட்சிக்கு பேரிழப்பு” என்று குறிப்பிட்டுள்ளார்.

எம்.ஹெச்.ஜவாஹிருல்லா: “சட்டமன்ற உறுப்பினராக இருந்த இந்த குறுகிய காலத்தில், பேரவையில் தனது தொகுதி சார்ந்தும், தமிழக மக்கள் நலன் சார்ந்தும் பல்வேறு கோரிக்கைகளை சட்டமன்றத்தில் முன்வைத்தவர். அவரது பணிகள் முழுமை பெற்றிருக்க வேண்டிய நிலையில், அவர் நம்மை விட்டு பிரிந்திருக்கிறார்” என்று தெரிவித்துள்ளார்.

பிரேமலதா: “கேப்டன் விஜயகாந்த்துக்கு நல்ல நண்பர். பழகுவதற்கு இனிமையானவர். அவருடைய இழப்பு அவரது குடும்பத்தாருக்கும், தமிழக காங்கிரஸ் தொண்டர்களுக்கும் பேரிழப்பாகும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

ஈ.ஆர்.ஈஸ்வரன்: “ஒரு பாரம்பரியமான அரசியல் குடும்பத்தில் இருந்து வந்தவர். சட்டமன்ற தேர்தல், பாராளுமன்ற தேர்தல் என பல தேர்தல்களை களம் கண்டவர். அவருடைய மறைவு யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாதது” என்று கூறியுள்ளார்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours