கொலை முயற்சி வழக்கில் லட்சத்தீவு எம்.பி. முகமது பைசலுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட தீர்ப்பை நிறுத்தி வைத்த கேரளா உயர்நீதிமன்றத்தின் உத்தரவை சுப்ரீம் கோர்ட்டு இன்று ரத்து செய்துள்ளது. புதுடெல்லி, லட்சத்தீவு மக்களவை தொகுதியில் போட்டியிட்டு வென்றவர் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் முகமது பைசல். கொலை முயற்சி வழக்கில் முகமது பைசலுக்கு லட்சத்தீவு கவரொட்டி நீதிமன்றம் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதால் பைசல் எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். பைசல் எம்.பி. பதவி பறிக்கப்பட்டதைத் தொடர்ந்து லட்சத்தீவு லோக்சபா தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.
அத்துடன் லட்சத்தீவு தொகுதிக்கான இடைத்தேர்தல் அறிவிக்கையும் தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்டது. இதற்கு இடையில், முகமது பைசல் எம்.பி.க்கு கவரொட்டி நீதிமன்றம் விதித்த 10 ஆண்டுகள் சிறை தண்டனைக்கு கேரளா உயர்நீதிமன்றம் தடை விதித்தது. இதனால் லட்சத்தீவு மக்களவை தொகுதிக்கான இடைத்தேர்தல் அறிவிக்கையை இந்திய தேர்தல் ஆணையம் திரும்பப் பெற்றது.
இந்த நிலையில், முகமது பைசலுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை கேரளா உயர்நீதிமன்றம் நிறுத்தி வைத்த உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இம்மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் முகமது பைசலுக்கு விதிக்கப்பட்ட 10 ஆண்டுகள் சிறை தண்டனையை நிறுத்தி வைத்த உத்தரவை ரத்து செய்து இன்று உத்தரவிட்டது. கேரளா ஐகோர்ட்டு இந்த வழக்கில் 6 வாரங்களுக்குள் மறு ஆய்வு செய்து விசாரணை நடத்தவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கில் எம்.பி.யின் தண்டனையை நிறுத்தி வைப்பதில் உயர்நீதிமன்றத்தின் அணுகுமுறை “தவறானது” என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
இதையும் படிக்க: காவிரி நீர் வழக்கு… உச்சநீதிமன்றம் தீர்ப்பு என்ன?
+ There are no comments
Add yours