சென்னை: செம்பரம்பாக்கம் ஏரி, சாத்தனூர் அணை திறந்த விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இடையே காரசார விவாதம் நடைபெற்றது.
தமிழக சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை கூடுதல் செலவுக்கான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது. விவாதத்தை தொடங்கிவைத்து பி.தங்கமணி பேசும்போது, “மத்திய நிதியமைச்சர், ஒவ்வொரு மாநிலத்துக்கும் எவ்வளவு நிதி கொடுத்திருக்கிறோம் என்றும், தமிழகத்தில் அமைச்சர் தவறான தகவலை சொல்வதாகவும் கூறியிருக்கிறார். அவர் கூறுவது உண்மையா? நீங்கள் கூறுவது உண்மையா?
ஃபெஞ்சல் புயல் மழை வெள்ளத்தால் கள்ளக்குறிச்சி, கடலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கிருஷ்ணகிரி 5 மாவட்டங்களுக்கு வானிலை மையம் ரெட் அலர்ட் கொடுத்தது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மக்களுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தால், இந்த அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்காது. செம்பரம்பாக்கத்தில் மொத்தமாக 29 ஆயிரம் கன அடி தண்ணீர் தான் திறந்துவிட முடியும். ஆனால், யாருக்கும் தெரிவிக்காமல் 1 லட்சம் கன அடி தண்ணீர் திறந்துவிட்டதால் தான் சென்னைக்கு பாதிப்பு ஏற்பட்டதாக எங்கள் மீது குற்றம்சாட்டினீர்கள்.
சாத்தனூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பது குறித்து மக்களுக்கு சரியான தகவலை கூறியிருந்தால், இந்த அளவுக்கு பாதிப்பு வந்திருக்காது. விவசாயிகளின் எதிர்காலம் வீணாகியுள்ளது. அவர்களுக்கு இழப்பீடு கொடுக்க வேண்டும். அனைவருக்கும் நிவாரண தொகையை வழங்க வேண்டும். திருவண்ணாமலையில் 7 பேர் இறப்புக்கு ரூ.5 லட்சம் கொடுத்திருக்கிறீர்கள். கள்ளச் சாராயம் குடித்து இறந்தால் ரூ.10 லட்சம் கொடுக்கிறீர்கள். நிவாரணம் கொடுப்பதில் என்ன அளவுகோல் வைத்துள்ளீர்கள். எவ்வளவோ செலவு செய்கிறீர்கள். கூடுதலாக ரூ.5 லட்சம் கொடுக்க வேண்டும்,” என்று பேசினார்.
அதற்கு பதிலளித்த வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், “புயல் வருவதற்கு ஒரு வாரம் முன்பாகவே முதல்வர் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளார். சாத்தனூர் அணையில் இருந்து தென்பெண்ணையாற்றில் திறந்து விடுவதற்கு 5 முறை எச்சரிக்கை கொடுத்திருக்கிறோம். நீங்கள் சென்னையில் திறந்துவிட்டதை போல், உடனடியாக இல்லாமல், 5 முறை எச்சரிக்கை கொடுத்திருக்கிறோம். முன்னதாகவே, லட்சக்கணக்கான மக்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது” என்றார்.
வனத்துறை அமைச்சர் பொன்முடி, “மழை பாதிப்பு கணக்கெடுக்கும் பணி மூன்று மாவட்டங்களில் நடைபெற்று வருகிறது. விரைவில் விவசாயிகளுக்கும், குடிசை வீடுகளில் வசிப்பவர்களுக்கு நிவாரண தொகை விரைவில் வழங்கப்படும்” என்று பதிலளித்தார்.
அப்போது எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, “வருவாய் துறை அமைச்சர் தவறான தகவலை குறிப்பிட்டுள்ளார். கனமழை பெய்யும்போது, செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 29 ஆயிரம் கன அடி தண்ணீர்தான் திறக்க முடியும். அதற்கு மேல் திறக்க முடியாது. அது ஒரு ஏரி, குடிநீருக்கானது. ஆனால், சாத்தனூர் அணை என்பது விவசாய பாசனத்துக்கும், குடிநீருக்கும் பயன்படுகிறது. அதிகாலை 2.45 மணிக்கு அறிவிப்பு கொடுத்துவிட்டு, 3 மணிக்கு தண்ணீர் திறந்துள்ளீர்கள். அதிகாலை நேரத்தில் இவ்வளவு தண்ணீர் திறந்ததால்தான் பாதிப்பு அதிகமானது.
செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திடீரென்று தண்ணீர் திறந்துவிடப்படவில்லை. செம்பரம்பாக்கம் ஏரிக்கு கீழே 100 ஏரிகள் உள்ளது. கனமழை பெய்யும்போது, அந்த 100 ஏரிகளில் நீர் நிரம்பி உபரி நீராக வெளியேறி அடையாற்றில் கலந்து, அதனால் பாதிக்கப்பட்டது. செம்பரம்பாக்கம் ஏரியால் அல்ல” என்றார். அதற்கு, முதல்வர் ஸ்டாலின், “செம்பரம்பாக்கம் ஏரியை சொல்லாமல் திறந்துவிட்டதால்தான் பாதிப்பு ஏற்பட்டது. சென்னையே மூழ்கியது. 240 பேருக்கு மேல் இறந்தனர். ஆனால், சாத்தனூர் அணையை பொறுத்தவரை 5 முறை எச்சரிக்கை கொடுக்கப்பட்டு, படிப்படியாக தண்ணீர் திறக்கப்பட்டது. அதனால்தான் இறப்புகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது” என்று பதில் அளித்தார்.
அதற்கு எடப்பாடி பழனிசாமி, “அடையாற்றில் 1 லட்சம் கன அடி தண்ணீர் சென்று கடலில் கலக்கலாம். செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 29 ஆயிரம் கன அடி தான் தண்ணீர் திறக்க முடியும். அது எப்படி பாதிக்கும்?” என்றார். அப்போது முதல்வர் ஸ்டாலின், “யாரிடம் அனுமதி வாங்குவது என்று தெரியாமல், செம்பரம்பாக்கம் ஏரியில் யாருக்கும் சொல்லாமல், தெரியாமல் அதிகாரிகள் தண்ணீர் திறந்து விட்டனர்” என்றார்.
மீண்டும் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி, “செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 29 ஆயிரம் கன அடிக்கு மேல் தண்ணீர் திறக்க முடியாது. அப்படி இருக்கும் போது, 1 லட்சம் கன அடி தண்ணீர் செல்லும் அடையாற்றில் எப்படி பாதிப்பு வரும். அதனை முதலில் உணர வேண்டும்” என்று கூற, முதல்வர் ஸ்டாலின், “சொல்லாமல் திறந்துவிட்டதுதான் பிரச்சினை. அதற்கு பதில் சொல்லாமல், வாழைப்பழம் கதை மாதிரி பேசுகிறீர்கள்” என்றார்.
அப்போது எடப்பாடி பழனிசாமி, “1 லட்சம் கன அடி தண்ணீர் செல்லும் பாதை அடையாற்றில் இருக்கும் போது, 29 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்ததால் எப்படி பாதிக்கும். மழை அதிகமாக பெய்து, செம்பரம்பாக்கம் ஏரிக்கு கீழே உள்ள 100 ஏரிகளில் இருந்து வந்த உபரி நீர் அடையாற்றில் கலந்தது. அதனால், சென்னை பாதித்தது. செம்பரம்பாக்கம் ஏரி திறப்பால் பாதிக்கவில்லை,” என்றார். அதற்கு முதல்வர் ஸ்டாலின், “ஆடிட்டிங் ரிப்போர்ட்டில், யாருக்கும் சொல்லாமல் செம்பரம்பாக்கம் ஏரியை திறந்துவிட்டதால் பாதிப்பு ஏற்பட்டது என்று தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது” என்றார்.
அப்போது சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், “அடையாற்றில் 1 லட்சம் கன அடி தண்ணீர் போகும் என்று சொல்கிறார். பொறியாளர்களை அழைத்து சென்று ஆய்வு செய்யுங்கள். 20 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்தாலே, ஆற்றங்கரையோரம் உள்ள 7 தொகுதிகள் பாதிக்கும். அடையாற்றில் 1 லட்சம் கன அடி தண்ணீர் போகும் என்ற சவாலை நீங்கள் ஏற்க தயாராக இருந்தால், எல்லா துறை நிபுணர்களையும் நானே அழைத்து வருகிறேன். நீங்களும் வாருங்கள்” என்றார்.
அப்போது இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, “முன்னறிவிப்பு இல்லாமல் திறக்கப்பட்டதால் தான் 280 மேற்பட்ட உயிர்கள் பலியாகின. இதுவரை இப்படி உயிரிழப்புகள் ஏற்படவில்லை” என்றார். அதற்கு எடப்பாடி பழனிசாமி, “280 பேர் இறந்தார்கள் என எந்த அடிப்படையில் சொல்கிறீர்கள். அதை விளக்க வேண்டும். பொய்யை திரும்ப திரும்ப பேசி மெய் என்று நிரூபிக்க முடியாது” என்றார்.
அப்போது, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், “செம்பரம்பாக்கம் ஏரியின் கீழ் 100 ஏரிகள் எங்கே இருக்கிறது” என கேள்வி எழுப்பினார். முதல்வர் ஸ்டாலின், “யாருக்கும் சொல்லாமல் தான் செம்பரம்பாக்கம் திறக்கப்பட்டது. 2018-ம் ஆண்டு உங்கள் ஆட்சியில், சிஏஜி அறிக்கையில் உயிரிழப்புக்கு காரணம் மனித தவறு என்று குறிப்பிடப்பட்டுள்ளது” என்றார்.
அதற்கு பி.தங்கமணி, “கடந்த ஆண்டு மழை வெள்ளம் வந்த போது, சென்னையில் கஷ்டத்தில் இருந்த மக்களை பார்த்து, மக்கள் எல்லாம் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்று சொன்னவர் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்” என்றார். இப்படியாக விவாதம் நடைபெற்றது.
+ There are no comments
Add yours