தமிழக அமைச்சரவைக் கூட்டம் வரும் அக்.8 இல் நடைபெறுகிறது

Spread the love

சென்னை: தமிழக அமைச்சரவைக் கூட்டம் வரும் 8-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் காலை 11 மணிக்கு நடைபெறுகிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை கடந்த செப்.28-ம் தேதி மாற்றியமைக்கப்பட்டது. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராகியுள்ளார். இவருக்கு அமைச்சரவையில், துரைமுருகனுக்கு அடுத்ததாக 3-வது இடம் அளிக்கப்பட்டுள்ளது. அமைச்சரவையில் இருந்து 3 அமைச்சர்கள் விடுவிக்கப்பட்டு, வி.செந்தில் பாலாஜி, சா.மு.நாசர், கோவி.செழியன், ஆர்.ராஜேந்திரன் ஆகியோர் புதிய அமைச்சர்களாக சேர்க்கப்பட்டனர். இவர்கள், செப்.29-ல் பதவியேற்றதுடன், செப்.30-ம் தேதி துறை அலுவலகங்களில் பொறுப்பேற்றுக் கொண்டனர்.

இதுதவிர க.பொன்முடி, தங்கம் தென்னரசு, ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன், சிவ.வீ.மெய்யநாதன், மதிவேந்தன், கயல்விழி செல்வராஜ் ஆகிய 6 அமைச்சர்களின் துறைகளிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மாற்றியமைக்கப்பட்ட அமைச்சரவையில், புதிதாக சேர்ந்துள்ள அமைச்சர்கள் 4 பேரில் கோவி.செழியன், ராஜேந்திரன் ஆகியோர் புதியவர்கள். எனவே, புதிய அமைச்சர்களுக்கு அறிவுரைகள் வழங்கும் வகையிலும், அரசின் திட்டங்கள் குறித்து விவாதிக்கவும் வரும் அக்.8-ம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 11 மணிக்கு தலைமைச் செயலகத்தில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது.

முன்னதாக, தமிழக முதல்வர் ஸ்டாலின், கடந்த ஆக.27 முதல் செப்.12 வரை அமெரிக்க சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இப்பயணத்தின் போது, ரூ.7618 கோடி முதலீட்டில், 11,516 பேருக்கு வேலையளிக்கும் வகையில் 19 ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. பொதுவாக தொழில் முதலீடுகளுக்கு வழங்கப்படும் சலுகைகள் மற்றும் முதலீட்டுக்கான அனுமதிகள் அமைச்சரவைக் கூட்டத்தில் வழங்கப்படும். அந்த வகையில், அமெரிக்க முதலீடுகள், புதிய நிறுவனங்களின் முதலீடுகள் தொடர்பாக விவாதிக்கப்பட்டு அக்.8-ம் தேதி கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்படும் என கூறப்படுகிறது.

இதுதவிர, ஏற்கெனவே நடைபெற்ற அமைச்சரவைக்கூட்டத்தில், சிறுபுனல் மின் உற்பத்தி திட்டம் உள்ளிட்ட சில கொள்கைகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, இந்தக் கூட்டத்திலும் தொழில் கொள்கைகள் குறித்து விவாதித்து ஒப்புதல் வழங்கபப்பட வாய்ப்புள்ளதாக அரசுத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. மேலும், ஏற்கெனவே தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு நிதி சார்ந்த திட்டங்கள் குறித்தும், அவற்றுக்கான நிதி வருகை குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது. தமிழகத்தில் தொடர்ந்து படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்படும் நிலையில், அது குறித்தும் விவாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours