காவிரி நதியிலிருந்து கர்நாடக அரசு தமிழகத்திற்கு குறிப்பிட்ட அளவு தண்ணீர் திறந்து விட வேண்டுமென்று காவிரி மேலாண்மை வாரியம் கூறியும் உரிய அளவு தண்ணீரை கடந்த சில மாதங்களாக கர்நாடக அரசு திறந்து விடவில்லை. மழை வரத்து குறைவாக இருப்பதன் காரணமாக தண்ணீர் திறந்து விடவில்லை என கர்நாடக அரசு தொடர்ந்து விளக்கம் கூறிவந்தது.
இதனை அடுத்து அண்மையில் காவிரி ஒழுங்காற்று வாரிய ஆலோசனை கூட்டமும், காவிரி மேலாண்மை வாரிய ஆலோசனை கூட்டமும் அடுத்தடுத்த நாட்கள் டெல்லியில் நடைபெற்றது. இதில் தமிழகம், கர்நாடகம், கேரளா, புதுச்சேரி ஆகிய நான்கு மாநில நீர்வளத்துறை அதிகாரிகள் பங்கேற்று பேசினார். இதில் தமிழகத்திற்கு வினாடிக்கு 5000 கனஅடி நீர் திறந்துவிட வேண்டும் என கர்நாடக அரசுக்கு உத்தரவிடப்பட்டு இருந்தது.
இதற்கிடையில் கர்நாடக அரசு காவேரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இதற்கும் தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. மேலும், இந்த அணை கட்டுவதற்கு மத்திய அரசு இன்னும் உரிய அனுமதி வழங்கவில்லை.
இந்த விவகாரங்கள் குறித்து அண்மையில், கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்து இருந்தார். அதில், காவேரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவது என்பது எங்கள் உரிமை. அது கர்நாடகாவுக்கு சொந்தமான இடம். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தேவையில்லாமல் தொல்லை தருகிறது.
மேலும், இந்த விவகாரத்தில் மேகதாதுவில் அணை கட்டுவதற்கு மத்திய அரசு அனுமதி அளிக்காமல் இருந்து வருகிறது. இதில் அரசியல் செய்ய மாட்டோம் என அவர்கள் கூறினாலும், தற்போது மத்திய அரசு இதில் அரசியல் செய்து வருகிறது என்றும் சித்தராமையா குற்றம் சாட்டினார்.
இதனை அடுத்து காவேரி நீர் விவகாரம் குறித்து பேசுகையில், காவேரியில் தண்ணீர் இருக்கும் போது உச்சநீதிமன்ற உத்தரவின் படி தண்ணீர் திறந்து விடுகிறோம். அதே போல் தண்ணீர் இல்லாத வறட்சி காலத்திலும் தண்ணீர் திறக்க கூறுகிறார்கள். அப்போது பேரிடர் காலத்தில் தண்ணீர் திறப்பது போல தான் திறக்க முடியும்.
ஆனால், இப்போது உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட காரணத்தாலேயே தண்ணீர் திறக்கப்படுகிறது. வரும் செப்டம்பர் 21ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் காவேரி நதிநீர் பங்கீடு தொடர்பான வழக்கு விசாரணை வரவுள்ளது. அதில் கர்நாடக அரசு உரிய விளக்கம் அளிக்கும் என கர்நாடக முதல்வர் சித்தராமையா கூறினார்.
+ There are no comments
Add yours