விழுப்புரம்: சிதம்பரம் நடராஜர் கோயிலில் தீட்சிதர்கள் கிரிக்கெட் விளையாடியதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று பாஜக மாநில ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் ஹெச்.ராஜா கூறினார்.
விழுப்புரத்தில் உள்ள பாஜகஅலுவலகத்தில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: ஹரியனா, ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தல்களில் காங்கிரஸ் ஆதரவு ஊடகங்களின் பொய்பிரசாரங்களையும் மீறி, அம்மாநிலமக்கள் சிந்தித்து வாக்களித்துள்ளனர். ஹரியானாவில் தேசியஜனநாயக கூட்டணிக்கு மக்கள் வாக்களித்து, பிரதமரின் நடவடிக்கைகள் மற்றும் திட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோயில்களிலும் வழிபாட்டுக்கு கட்டணம்வசூலிக்கப்படுகிறது. ஆனால்,சிதம்பரம் நடராஜர் கோயிலில் எந்தகட்டணமும் வசூலிக்கப்படுவதில்லை. நல்ல முறையில் தீட்சதர்களால் அக்கோயில் நிர்வகிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாக சிலர் நடராஜர் கோயிலுக்கு எதிரான தகவல்களை திட்டமிட்டு பரப்பி வருகின்றனர். இது மிகவும் கண்டிக்கத்தக்கது. சிதம்பரம் நடராஜர் கோயில் வளாகத்தில் தீட்சிதர்கள் கிரிக்கெட் விளையாடியதற்கான ஆதாரம் இல்லை. மேலும், அதை வீடியோ எடுத்த விசிக நிர்வாகியை யாரும் தாக்கியதற்கான ஆதாரமும் இல்லை. இதுகுறித்து யாரும் தேவையின்றி கருத்து தெரிவித்து, குழப்பம் ஏற்படுத்த வேண்டாம்.
வழிபாட்டுக்கு கட்டணம்… தமிழகம் முழுவதும் உள்ள கோயில்களில் வழிபாட்டுக்கு கட்டணம் வசூலிக்கப்படுவதை கண்டித்து, இந்து அமைப்புகள் சார்பில் போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு ஹெச்.ராஜா கூறினார். பாஜக மாநில துணைத் தலைவர் ஏ.ஜி.சம்பத், செயலாளர் அஸ்வத்தாமன் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.
+ There are no comments
Add yours