“இந்திய மண்ணில் சனாதன சக்திகளுக்கு இனி இடம் கிடையாது!”

Spread the love

மணி விழா:

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் 60-ம் ஆண்டு நிறைவு விழா, மணி விழாவாக சென்னை தேனாம்பேட்டையில் நேற்று மாலை நடந்தது. விழாவுக்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லக்கண்ணு தலைமை தாங்கினார். திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினர்களாக நடிகர் சத்யராஜ், கவிஞர்கள் அறிவுமதி, பழனிபாரதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

விழாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சி பொதுச்செயலாளர்கள் ம.சிந்தனைசெல்வன் எம்.எல்.ஏ., ரவிக்குமார் எம்.பி., துணை பொதுச்செயலாளர்கள் வன்னியரசு, எஸ்.எஸ்.பாலாஜி எம்.எல்.ஏ. உள்பட மாநில-மாவட்ட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

இந்த விழாவில் தொல்.திருமாவளவன் கவிதை நடையில் பேசினார். அப்போது,

இந்தியா கூட்டணி வெல்லும் :

நாங்கள் சாதிய அடையாளம் தேடி அலைவோர் அல்ல. சாதி, மத, இனத்தில் அடையாளம் தேடுவோர் அல்ல. அம்பேத்கர் கட்டமைக்க விரும்பிய ஜனநாயக, சமத்துவ இந்தியாவை கட்டமைக்க கால் நூற்றாண்டாய் களமாடும் விடுதலை சிறுத்தைகள் நாங்கள். ஆண்ட வம்சமல்ல நாங்கள், கவுதம புத்தர் வழிவந்த ஞானவம்சம்.

தேர்தல் வெற்றிக்காக சூதாடும் அரசியல்வாதிகள் நாங்கள் அல்ல. ஆயிரம் ஆண்டுகளாக விளிம்பு நிலை மக்களின் உரிமைகளுக்காக போராடும் அம்பேத்கரின் பிள்ளைகள்.நஞ்சை பரப்பும் சனாதன சக்திகளை நடுங்க வைக்கும் பெரும்படையாய் தமிழ்நாட்டில் வீறுநடை போடும் நாங்கள் பெரியாரின் பேரப்பிள்ளைகள். சங்கத்தமிழ் விளைந்த எங்கள் தமிழ் மண்ணில் சனாதன சக்திகளுக்கு இடம் கிடையாது. தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியாவிலும் இடமில்லை. இந்து, இஸ்லாம், கிறிஸ்தவம் இணைந்து அணிசேர்ந்தோம். இந்தியாவாக, இந்தியா கூட்டணியாக ஒருங்கிணைந்தோம். அனைத்து தரப்பு மக்களையும் திரட்டி எழுந்தோம். ஆட்சி பீடத்தில் இருந்து சனாதனத்தை விரட்டி அடிப்போம். இந்தியா வெல்லும், இந்தியா கூட்டணி வெல்லும், ஜனநாயகம் வெல்லும்.

கவியரங்கு:

அதனைத் தொடர்ந்து மணிவிழா மலர் வெளியிடப்பட்டது. இந்த மலர் விழா மேடைக்கு பல்லக்கில் வைத்து கொண்டுவரப்பட்டது. இதனை நல்லக்கண்ணு வெளியிட, முதல் பிரதியை கி.வீரமணி பெற்றுக்கொண்டார்.

முன்னதாக சினிமா பாடல் ஆசிரியர் கபிலன் தலைமையில் கவியரங்கு நடந்தது. இதில் தி.மு.க.வர்த்தகர் அணி செயலாளர் கவிஞர் காசிமுத்து மாணிக்கம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours