சனாதனம் பற்றி கருத்து சொல்ல உதயநிதி ஸ்டாலினுக்கு உரிமை உண்டு.! கமல்ஹாசன் ஆதரவு.!

Spread the love

சென்னையில் அண்மையில் நடைபெற்ற சனாதனம் ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்று சனாதனம் குறித்து அமைச்சர் உதயநிதி பேசியது சர்ச்சையானது. டெங்கு, மலேரியா, கொரோனாவை போன்று சனாதனமும் ஒழிக்கப்பட வேண்டிய ஒன்று தான் என அமைச்சர் உதயநிதி பேசியது இந்திய அளவில் பெரும் சர்ச்சையாகி உள்ளது. தற்போது இந்திய அரசியல் வட்டாரம் முழுக்க பேசுபொருளாக மாறி இருப்பது சனாதன குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியது தான்.

அமைச்சர் உதயநிதியின் பேச்சுக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா உள்ளிட்ட மூத்த பாஜக தலைவர்கள், மத்திய அமைச்சர்கள், பாஜக ஆதரவு அமைப்புகள் என பலரும் கண்டனம் தெரிவித்தனர். அமைச்சர் உதயநிதி பேச்சுக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என பிரதமர் மோடி பாஜகவினருக்கு அறிவுறுத்தி உள்ளார்.

அதுமட்டுமில்லாமல், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு வழக்கறிஞர்கள் கடிதம் எழுதியுள்ளனர். உத்தரபிரதேசம் மற்றும் புகாரில் உதயநிதிக்கு எதிராக காவல் நிலையங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், சனாதனம் ஒழியும் வரையில் எனது குரல் ஒலித்து கொண்டே இருக்கும் என மீண்டும் தனது கருத்தை உறுதிபட கூறியிருந்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.

அதே போல அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசிய கருத்துக்கு ஆதரவும் பெருகி வருகிறது. ஏற்கனவே பல்வேறு கட்சி தலைவர்கள், திரை பிரபலங்கள் ஆதரவு தெரிவித்த நிலையில், மக்கள் நீதி மய்ய தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் தனது X சமூக வலைதள பக்கத்தில் இதுகுறித்து தனது ஆதரவு கருத்தை பதிவிட்டுள்ளார். அதில், உண்மையான ஜனநாயகத்தின் தனிச்சிறப்பு அதன் குடிமக்கள் கருத்து வேறுபாடு மற்றும் விவாதத்தில் ஈடுபட கொடுக்கப்படும் சுதந்திரம் ஆகும். சரியான கேள்விகளைக் கேட்பது முக்கியமான பதில்களுக்கு வழிவகுத்தது மற்றும் சிறந்த சமூகமாக நமது வளர்ச்சிக்கு பங்களித்தது என்பதை வரலாறு மீண்டும் மீண்டும் நமக்குக் கற்பித்துள்ளது.

சனாதனத்தைப் பற்றி பேசுவதற்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு உரிமை உண்டு. அவருடைய கருத்துடன் நீங்கள் உடன்படவில்லை என்றால், வன்முறை அச்சுறுத்தல்கள் அல்லது சட்டரீதியான மிரட்டல் உத்திகள் அல்லது குறுகிய அரசியல் ஆதாயங்களுக்காக உணர்ச்சிபூர்வமான பதில்களைத் தூண்டும் வகையில் அவரது வார்த்தைகளைத் திரித்துக் கூறுவதற்குப் பதிலாக, சனாதனம் பற்றிய விவாதத்தில் ஈடுபடுவது முக்கியம்.

ஆரோக்கியமான விவாதங்களுக்கு தமிழ்நாடு எப்போதும் பாதுகாப்பான இடமாக இருந்து வருகிறது. உள்ளடக்கம், சமத்துவம் மற்றும் முன்னேற்றத்தை உறுதிசெய்து, நமது மரபுகளை விமர்சன ரீதியாக மதிப்பீடு செய்வது மிகவும் முக்கியமானது. இணக்கமான மற்றும் உள்ளடக்கிய சமூகத்தை வளர்ப்பதற்கு ஆக்கபூர்வமான விவாதங்களை ஏற்றுக்கொள்வோம் என கமல்ஹாசன் தனது கருத்தை பதிவிட்டுள்ளார்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours