புதுச்சேரியில் டூவீலர்கள், கார்கள் பதிவு செய்வதற்கான வரியை உயர்த்த அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிய வந்ததுள்ளது.
வாகன பதிவு வரி குறைவாக இருப்பதால் டூவீலர்கள், கார்கள் வாங்க புதுச்சேரிக்கு திரை நட்சத்திரங்கள் தொடங்கி பலரும் வருகின்றனர். இந்நிலையில் அந்த வரியை உயர்த்த புதுச்சேரி அரசு முடிவு செய்துள்ளது. புதுச்சேரியில் டூவீலர்கள், கார்கள், பேருந்துகள், லாரிகள் புதிதாக வாங்கும்போது அதற்கான வரி பதிவு குறைவாக உள்ளது. கேரளம், தமிழகம், ஆந்திரத்தை ஒப்பிடுகையில் மிகக்குறைவு. அதனால் கேரளம் உள்ளிட்ட பல மாநில திரை நட்சத்திரங்கள், தொழிலதிபர்கள் நவீன ஆடம்பர கார்களை புதுச்சேரியில் பதிவு செய்து எடுப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
சில ஆண்டுகளுக்கு முன்பு கேரள திரை நட்சத்திரங்கள் புதுச்சேரி பதிவெண் கார்களை இயக்குவதில் பிரச்சினை உண்டாகி, கேரள அரசு தரப்பு அதிகாரிகள் புதுச்சேரி வந்து விசாரணை நடத்திய சம்பவங்களும் நடந்ததுண்டு. ஏற்கெனவே புதுச்சேரியில் நிதி நிலையை மேம்படுத்த மதுக்கடைகள் அதிகரிக்கப்பட்டன. ரெஸ்டோ பார்கள் திறக்க அனுமதியும் தரப்பட்டது. இந்நிலையில் புதுச்சேரியில் டூவீலர்கள், கார்கள் பதிவு செய்வதற்கான வரியை உயர்த்த அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிய வந்ததுள்ளது.
இதுதொடர்பாக போக்குவரத்துத்துறை உயர் அதிகாரிகளிடம் விசாரித்தபோது, ” புதுச்சேரியை ஒட்டியுள்ள மாநிலங்களில் வாகனங்களை பதிவு செய்ய வரி அதிகம். ஆண்டுக்கு புதுச்சேரியில் 60 ஆயிரம் வாகனங்கள் புதிதாக பதிவு செய்யப்படுகின்றன. கடந்தாண்டு ரூ.150 கோடி வரை வருவாய் கிடைத்தது.
நடப்பாண்டு ரூ. 170 கோடி வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம். உயர் ரக கார்களையும் பலர் புதுச்சேரியில் பதிவு செய்கின்றனர். இதர மாநிலங்களை விட புதுச்சேரியில் வாகனங்களை பதிவு செய்ய கட்டணம் குறைவு. அதனால் அதை உயர்த்த திட்டமிட்டுள்ளோம். தற்போது டூ வீலருக்கு 1 சதவீத வரியை வசூல் செய்கிறோம். அதை நான்கு சதவீதமாக உயர்த்த திட்டமிட்டுள்ளோம்.
அதேபோல் கார்களுக்கு, அதன் விலைக்கு ஏற்ப 4 சதவீதம் முதல் 7 சதவீதம் வரை தற்போது உள்ளதை 8 சதவீதமாக உயர்த்த முடிவு செய்துள்ளோம். இதற்கான கோப்பை அரசு ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளோம். விரைவில் முடிவு எடுப்பார்கள். பதிவு வரிக்கான தொகையை உயர்த்தினாலும் அண்டை மாநிலங்களை ஒப்பிடும் போது தற்போதும் குறைவுதான். அதனால் புதுச்சேரிக்கு வாகனம் வாங்க வருவோர் எண்ணிக்கை குறையாது” என்று தெரிவிக்கின்றனர்.
+ There are no comments
Add yours