‘கோட்’ படத்தில் சுபாஷ் சந்திர போஸ் அவமதிப்பு ?: விஜய்க்கு பாஜக கண்டன கடிதம்

Spread the love

சென்னை: “தி கோட்” திரைப் படத்தில் சுபாஷ் சந்திர போஸை இழிவுப்படுத்தியது மன்னிக்க முடியாதது என நடிகர் விஜய்க்கு பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் கடிதம் அனுப்பியுள்ளார்.

இது குறித்து அவர் அனுப்பியுள்ள கடிதத்தில், “தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கியுள்ள நீங்கள் இனிமேல் திரைப்படங்களில் நடிக்க மாட்டேன் என அறிவித்துள்ளீர்கள். திரைத்துறையில் உச்சத்தில் இருக்கும் போதே, திரைத்துறையில் இருந்து முற்றிலும் விலகி அரசியலில் ஈடுபடுவதாக அறிவி்த்துள்ளீர்கள். கமல்ஹாசனுக்கு இல்லாத துணிச்சல், உறுதி உங்களுக்கு இருப்பது மகிழச்சி அளிக்கிறது. வெங்கட் பிரபு இயக்கியிருக்கும் ‘தி கோட்’ படம் பார்த்தேன். இந்தப் படத்தில் ஒரு காட்சி என் மனதை மிகவும் காயப்படுத்தி இருக்கிறது.

இப்படத்தில் செல்போன் திருடனாக நடித்துள்ள யோகி பாபுவிடம், செல்போனை பெற வேண்டும் என்பதற்காக நீங்கள் பேசும்போது, நான் காந்தி என்று தங்கள் பெயரை கூறும்பொழுது, பதிலுக்கு யோகி பாபு நீ காந்தி என்றால் நான் சுபாஷ் சந்திரபோஸ் என்கிறார். இது இயல்பான கிண்டலாக இருக்கலாம். சுதந்திரம் என்ற லட்சியத்திற்காகவே மகாத்மா காந்தியும், நேதாஜி சுபாஷ் சந்திபோஸும் போராடினார்கள். ஆனால், இருவரின் பாதைகளும் வேறு வேறாக இருந்தன.

அதனால் மகாத்மா காந்தியையும், நேதாஜியையும் நேர் எதிரெதிரானவர் போல காட்டியிருக்கிறீர்கள். திருடன் கதாபாத் திரத்திற்கு கிண்டலுக்காக கூட நேதாஜி பெயரை பயன்படுத்தியிருக்கக் கூடாது. இந்தியர்கள் மட்டுமல்ல உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் வருத்தப்படக் கூடிய காட்சி அமைப்பை உருவாக்கி, மன்னிக்க முடியாத தவறை தெரிந்தோ, தெரியாமலோ செய்து விட்டீர்கள். நேதாஜி இல்லாமல் இருந்திருந்தால் நமக்கு சுதந்திரம் கிடைக்க இன்னும் தாமதமாகி இருக்கலாம்.

அவரின் பெயரைக் கொச்சைப்படுத்தும் விதமாக காட்சி அமைந்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. தி கோட் படத்தில் சுபாஷ் சந்திரபோஸ் பெயர் எதிர்மறையாக பயன்படுத்தப்படாமல் நீங்களும் பட குழுவும் தவிர்த்திருக்கலாம். நீங்கள் நினைத்தால் இப்போது கூட அதை மாற்ற முடியும். ஆங்கிலேயரை எதிர்த்து இந்திய தேச விடுதலைக்கான அறவழிப் போராட்டம் காந்தியடிகள் தலைமையில் நடந்தபோது, இந்திய மக்கள் படும் துயரைக் கண்டு இந்திய தேசிய ராணுவம் அமைத்து ஆயுதப் போராட்டத்தை நடத்தியவர் மாவீரர் சுபாஷ் சந்திர போஸ்.

இந்தியாவின் சுதந்திரத்துக்காக போராடியவர்களுள் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் முதன்மையானவர். தமிழகத்தின் பள்ளி, கல்லூரி, பல்கலைக் கழகங்களில் அவருடைய வீரத்தின் பெருமையை, தேசப் பற்றை, ஏக வரலாற்றை பாடமாக வைக்க வேண்டும். அவர் கொண்டாடப்பட வேண்டும் என்று பேசி வருகின்ற வேளையில் இதற்கு நேர் மாறாக அவருடைய பெருமையை சிறுமைப்படுத்தும் விதமாக “கோட்” திரைப் படத்தில் ஒரு செல்போன் திருடனுக்கு அவருடைய பெயரைச் சூட்டியது மிகப் பெரிய தவறு.

மேலும் அந்த காட்சிகளில் மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு என்று நகைச்சுவைக்காக பாத்திரங்களின் பெயரை பயன்படுத்தி இருப்பது சுதந்திர போராட்ட வீரர்களை, நாட்டின் தலைவர்களை அவமானப்படுத்தும் செயல். இதற்குக் காரணமான கோட் திரைப் படத்தின் தயாரிப்பாளர்கள், இயக்குனர் குழு, நடிகர்கள் என அனைவருமே வெட்கி தலைக்குனிய வேண்டிய விஷயம் என்பதை “கோட்” திரைப்படக் குழு அனைவரும் உணர வேண்டும்.

திரைப்பட காமெடி என்கிற மிகக் குறுகிய வட்டத்தில் அவரின் புகழை கெடுப்பது போன்ற காட்சிகளை நடிகர் விஜய்யின் “கோட்” படத்தில் உருவாக்கப்பட்டது மன்னிக்க முடியாத தவறு என்பதை நடிகர் விஜய்யும், படக் குழுவினரும் இயக்குனரும் படத் தயாரிப்பாளரும் உணர வேண்டும்” என்று கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours