தேனி: தவெக மாநாடுக்கு அழைப்பு வந்தால் தேமுதிக பங்கேற்குமா என்பதை தலைமை அறிவிக்கும் என விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் அறிவித்துள்ளார்.
தேனியில் உள்ள தனியார் திரையரங்கில் விஜய் நடித்த ‘GOAT’ திரைப்படத்தை, மறைந்த நடிகர் விஜயகாந்த்தின் மகன்கள் விஜய பிரபாகரன், சண்முக பாண்டியன் மற்றும் நடிகர் சரத்குமார் ஆகியோர் இணைந்து நேற்று பார்த்தனர்.
நடிகர் விஜய் நடித்து வெங்கட் பிரபு இயக்கத்தில் கடந்த ஐந்தாம் தேதி ‘GOAT’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது. இந்தத் திரைப்படத்தில் மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஏ.ஐ தொழில்நுட்பத்தின் மூலம் திரையில் கொண்டு வந்துள்ளனர். இதற்காக படம் வெளியிடுவதற்கு முன்பு விஜயகாந்தின் மனைவியும், தேமுதிக பொதுச்செயலாளருமான பிரேமலதா மற்றும் அவரது மகன்களை அவர்களது வீட்டில் சந்தித்து வாழ்த்து பெற்றார் நடிகர் விஜய்
இந்த நிலையில் தேனியில் விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன், சரத்குமார் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் தேனியில் உள்ள ஒரு திரையரங்கில் இந்தத் திரைப்படத்தை விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன், சண்முக பாண்டியன், சரத்குமார் மற்றும் படக்குழுவினர் ஆகியோர் சென்று பார்த்தனர்.
முன்னதாக திரையரங்கிற்கு வருகை தந்த விஜய பிரபாகரன், சண்முக பாண்டியன், சரத்குமாருக்கு தேமுதிக நிர்வாகிகள் மற்றும் தவெக நிர்வாகிகள் மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் விஜய பிரபாகரன் செய்தியாளர் சந்திப்பில் பேசியதாவது, “ஏ.ஐ தொழில்நுட்பத்தில் அப்பா வந்த காட்சியில் ஒவ்வொரு நொடியும் அப்பாவை பார்த்துக் கொண்டே இருந்தேன். மகிழ்ச்சியாக இருந்தது. அப்பா வந்த காட்சியை வெங்கட் பிரபு சிறப்பாக இயக்கியுள்ளார் விஜயும் நன்றாக நடித்துள்ளார். அப்பாவுக்கும், விஜய்க்கும் ’செந்தூரப் பாண்டி’ படத்திலிருந்து பாசமும் பந்தமும் தொடர்ந்து வந்து உள்ளது. இது எங்கள் குடும்பப் படமாக நாங்கள் பார்க்கிறோம். தவெக மாநாட்டை நடத்துவதற்கு அவர்களுக்கே பல சிக்கல் நிலவுவதாக கேள்விப்பட்டோம். இது விஜய் கட்சி தொடங்கியதற்காக நடத்தும் மாநாடு. எங்களுடன் கூட்டணி அமைப்பதற்காக இல்லை. அழைப்பு வந்தால் தேமுதிக பங்கேற்குமா என்பதை தலைமை அறிவிக்கும்” என தெரிவித்தார்.
+ There are no comments
Add yours