பிளாஸ்டிக் பொறியியலில் வேலை வாய்ப்புக்கான 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்!

Spread the love

சென்னை: சென்னையில் உள்ள மத்திய அரசு நிறுவனமான சிப்பெட், பிளாஸ்டிக் பொறியியலில் சிறப்பான வேலைவாய்ப்புக்கான 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகளை நடத்துகிறது. இந்த படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை தொடங்கவுள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு: மத்திய பெட்ரோகெமிக்கல்ஸ் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (சிப்பெட்), 1968-ம் ஆண்டில் இந்திய அரசால் ஐக்கிய நாடுகளின் மேம்பாட்டுத் திட்டத்தின் (UNDP) உதவியுடன் சென்னையில் நிறுவப்பட்டது. இந்தச் சிறப்பு நிறுவனம் நிறுவப்பட்டதன் முக்கிய நோக்கம் பிளாஸ்டிக் பொறியியல் மற்றும் தொழில்நுட்பத்தின் பல்வேறு பிரிவுகளில் மனித ஆற்றலை மேம்படுத்துவதாகும்.

இன்று சிப்பெட் நிறுவனம், இந்திய அரசின் ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகத்தின் கீழ், உயர்கல்வி மற்றும் தொழில்நுட்ப கல்விக்கான முதன்மையான கல்வி நிறுவனமாகத் திகழ்கிறது. வடிவமைப்பு, CAD / CAM / CAE, கருவி மற்றும் அச்சு உற்பத்தி, உற்பத்தி பொறியியல், சோதனை மற்றும் தர உத்தரவாதம், பாலிமர் மற்றும் அதனைச் சார்ந்த தொழில்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் சிப்பெட் செயல்பட்டு வருகிறது.

பாலிமர், பிளாஸ்டிக் துறையில் 55 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட நிபுணத்துவம் கொண்ட சிப்பெட் நாடு முழுவதும் 45 இடங்களில் செயல்பட்டு வருகிறது. ஏஐசிடிஇ, என்பிஏ அமைப்புகளின் அங்கீகாரம் பெற்ற பாடத் திட்டங்களையும், ஆய்வகங்களையும் நடத்தி வருகிறது. ஐஎஸ்ஓ 9001: 2015 சான்றிதழைப் பெற்ற இந்த நிறுவனம் சிறப்பான வேலைவாய்ப்புகளைப் பெறுவதற்கான பாடத் திட்டங்களை மாணவ, மாணவியருக்கு அளித்து வருகிறது. சிறந்த சூழலில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் தனித்தனி விடுதி வசதி உள்ளது. இந்த நிறுவனத்தின் முன்னாள் மாணவர்கள் உலக அளவில் முக்கிய பதவிகளை வகித்து வருகின்றனர்.

ஏஐசிடிஇ அங்கீகாரம் பெற்ற 2024-25-ம் ஆண்டுக்கான டிப்ளமோ வகுப்புகளுக்கு மாணவர்கள் சேர்க்கைத் தொடங்கியுள்ளது. பிளாஸ்டிக் மோல்டு தொழில்நுட்பம், பிளாஸ்டிக் தொழில் நுட்பம் ஆகியவற்றில் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள் வழங்கப்படுகின்றன. இதில் சேர்வதற்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு இல்லை. சிப்பெட் டிப்ளமோ பெற்றவர்கள் பிளாஸ்டிக் தொழில்நுட்ப பிடெக் வகுப்புகளுக்கு நேரடியாக சேரலாம். ஆன்லைனில் விண்ணப்பங்களை அனுப்ப https://cipet24.onlineregistrationform.org/CIPET என்ற இணையதள முகவரியை அணுகவும்.

மேலும் விவரங்களுக்கு 9600254350 / 9941844937 / 9345022712 என்ற தொலைபேசி எண்களையோ அல்லது Email : olc-chennai@cipet.gov.in என்ற மின்னஞ்சல் முகவரியையோ, Website: www.cipet.gov.in என்ற இணைய தளத்தையோ அணுகலாம், என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours