உதகை: நீலகிரி மாவட்டம் உதகையில் கேரட் விலை உயர்ந்து கிலோரூ.110-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
உதகையில் விளைவிக்கப்படும் உருளைக்கிழங்கு, கேரட்போன்ற காய்கறிகள் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. மலைக் காய்கறி சாகுபடியில் கேரட் முக்கியப் பயிராக உள்ளது.
உதகை, குன்னூர், கோத்தகிரி, குந்தா பகுதிகளில் பல ஆயிரம்ஹெக்டேர் பரப்பில் விவசாயிகள்கேரட் சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். பல்லாயிரக்கணக்கான விவசாயத் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேரட் அறுவடையை மட்டுமே சார்ந்துள்ளது.
இங்கு அறுவடை செய்யப்படும் கேரட், மேட்டுப்பாளையம், சென்னை போன்ற பகுதிகளில் உள்ள மொத்த ஏல மண்டிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. ஒரு கிலோ கேரட் ரூ.25 முதல் ரூ.35 வரை விற்பனையாகி வந்த நிலையில் நேற்று விலை உயர்ந்து ரூ.110-க்கு விற்பனையானது.
இதுகுறித்து பாலாடா பகுதியைச் சேர்ந்த மலைக் காய்கறிகள் மொத்த வணிகர் ஹரிஹரன்கூறும்போது, ‘‘நீலகிரி மாவட்டத்தில் இரவு, பகலாக கேரட் அறுவடை செய்யப்படும். இதற்கு மனித உழைப்பே அடிப்படை என்பதால், அதிக எண்ணிக்கையில் தொழிலாளர்கள் தேவை. தீபாவளி பண்டிகை காரணமாக தொழிலாளர்கள் வேலைக்கு வரவில்லை. மண்டிகளுக்கு கேரட் வரத்து சரிந்ததால், விலை அதிகரித்துள்ளது. விரைவில் விலை சீராகும்’’ என்றார்.
+ There are no comments
Add yours