புதுடெல்லி: ‘இந்தியாவில் உற்பத்தி செய்வோம்’ முன்முயற்சியின் ஒரு பகுதியாக, மதுபான ஏற்றுமதியை ஊக்குவிக்க மத்திய அரசின் வேளாண் மற்றும் பதனப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்திய மது வகைகளுக்கு உலகளவில் அதிக வரவேற்பு காணப்படுகிறது. இது வளர்ச்சிக்கான வாய்ப்பை வழங்குகிறது. இதனைக் கருத்தில் கொண்டு, இந்திய மது மற்றும் மது அல்லாத பானங்களை உலகளவில் ஊக்குவிக்க வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் (APEDA) முடிவு செய்துள்ளது. அடுத்த சில ஆண்டுகளில் 1 பில்லியன் டாலர் ஏற்றுமதி வருவாயை இலக்காகக் கொண்டு இதற்காக திட்டமிடப்பட்டுள்ளது.
‘இந்தியாவில் உற்பத்தி செய்வோம்’ முன்முயற்சியின் ஒரு பகுதியாக அபீடா (APEDA) பெரிய நாடுகளுக்கு இந்திய மதுபானங்களின் ஏற்றுமதியை அதிகரிக்க இலக்கு நிர்ணயித்துள்ளது. மதுபான ஏற்றுமதியில் இந்தியா தற்போது உலக அளவில் 40-வது இடத்தில் உள்ளது. இந்திய மதுபானங்களுக்கு இதுவரை இல்லாத நடவடிக்கையாக, கோடவன் சிங்கிள் மால்ட் விஸ்கி, இந்தியாவின் ராஜஸ்தானில் தயாரிக்கப்பட்ட கைவினைஞர் சிங்கிள் மால்ட் விஸ்கியாக இங்கிலாந்தில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
கோடவனின் முதல் தொகுதியை மத்திய அரசின் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் ராஜேஷ் அகர்வால், டியாஜியோ பிஎல்சியின் தலைமை நிர்வாகி டெப்ரா க்ரூ, அபீடா தலைவர் அபிஷேக் தேவ், டியாஜியோ இந்தியாவின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ஹினா நாகராஜன் மற்றும் பிற மூத்த பிரதிநிதிகள் கூட்டாக கொடியசைத்து இங்கிலாந்துக்கு அனுப்பி வைத்தனர்.
கோடவன் சிங்கிள் மால்ட் விஸ்கி, மார்ச் 2024-ல் APEDA-ன் கீழ் லண்டனில் நடந்த சர்வதேச உணவு மற்றும் பானங்கள் திருவிழாவில் (IFE) பங்கேற்று கோடவனின் விளம்பரங்களை மேற்கொண்டது. இது இங்கிலாந்தில் கோடவனை அறிமுகப்படுத்துவதற்கும், அந்நாட்டிற்கு ஏற்றுமதியைத் தொடங்குவதற்கும் ஒரு முன்னோடியாக அமைந்தது. இந்த முயற்சி ராஜஸ்தானின் ஆல்வார் பகுதி விவசாயிகளுக்கு ஆதரவளிக்கும். கோடவன் உற்பத்தியில் பயன்படுத்தப்படும் ஆறு வரிசை பார்லி, உள்நாட்டில் கொள்முதல் செய்யப்படுகிறது. இது உள்ளூர் விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க உதவுகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
+ There are no comments
Add yours