தமிழ் புத்தாண்டு தினத்தில் சின்னத்திரை பிரபலமான அறந்தாங்கி நிஷா புதிய தொழில் ஒன்றை தொடங்கியுள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை சேர்ந்தவரான நிஷா, 2015 ம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப் போவது யாரு-வில் பங்கேற்று வெளியுலகிற்கு அறிமுகமானார். அதைத் தொடர்ந்து மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை, குக் வித் கோமாளி, பிக் பாஸ் சீசன் 4, ஸ்டார் கிட்ஸ் என ஏகப்பட்ட நிகழ்ச்சிகளில் தோன்றினார்.
சின்னத்திரையில் தனக்கென தனியிடம் பிடித்ததோடு, சின்னத்திரை நயன்தாரா என்று கிண்டலாக தன்னை அழைத்துக் கொள்ளும் அறந்தாங்கி நிஷா, 2018 ம் ஆண்டு வெளியான மாரி 2 படம் மூலம் வெள்ளித்திரையில் நடிகையாக அறிமுகமானார். இரும்புத்திரை, கோலமாவு கோகிலா, சீமராஜா, ஆண் தேவதை, கலகலப்பு 2, திருச்சிற்றம்பலம், ஜெயிலர் என ஏகப்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
பட்டிமன்றம் உள்ளிட்ட 800க்கும் மேற்பட்ட மேடை நிகழ்ச்சிகளில் தனது நகைச்சுவை திறமையை வெளிப்படுத்தியுள்ளார். கடந்த டிசம்பர் மாத சென்னை மழை வெள்ளத்தின்போது பாதிக்கப்பட்ட எழை, எளிய மக்களுக்கு தன்னால் இயன்றதை இவர் உதவியது மனிதாபிமான செயலாக பார்க்கப்பட்டது.
இந்த நிலையில் நிஷாவும் சுய தொழிலில் கால் பதித்துள்ளார். இதுதொடர்பாக வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள அவர், ‘அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள். நான் எப்பவும் பெண் தொழில் முனைவோருக்கு உத்வேகம் கொடுத்து வருகிறேன். அப்படியாக என்னையும் தொழில் சார்ந்து நிறைய பேர் உத்வேகம் அளித்துக் கொண்டு தான் இருக்கிறீர்கள்.
நாங்கள் இருக்கிறோம் என ஆதரவு தெரிவித்து இருக்கிறீர்கள். அந்த வகையில் இந்த தமிழ் புத்தாண்டில் சின்னதாக ஒரு தொழில் தொடங்கலாம் என முடிவெடுத்து செயல் படுத்தியுள்ளேன். நிஷா பேஷன் என்ற பெயரில் ஆடையகம் ஒன்றை தொடங்கியுள்ளேன். ரொம்பச்சின்னதா என் வீட்டுக்கு அருகிலேயே தொடங்கியிருக்கிறேன்.
இதனை ஆன்லைன் மற்றும் நேரடியாக பெறும் வகையில் வசதிகள் செய்யப்பட்டுள்ளது. கண்டிப்பாக அனைவரும் ஆதரவு தரும்படி கேட்டுக்கொள்கிறேன்’ என அந்த வீடியோவில் அவர் தெரிவித்துள்ளார். இதையடுத்து அறந்தாங்கி நிஷாவுக்கு ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
+ There are no comments
Add yours