’அயலான்’ படத்தின் டீசர் வெளியீட்டு விழா!

Spread the love

இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் நடிகர்கள் சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீதி சிங் நடிப்பில் 24ஏ.எம். தயாரிப்பில் அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியாக இருக்கும் திரைப்படம் ‘அயலான்’. இதன் டீசர் வெளியீட்டு விழா படக்குழுவினர் கலந்து கொள்ள நேற்று மாலை சென்னையில் நடந்தது.

நிகழ்வில் முதலாவதாக கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் எக்ஸிகியூடிவ் புரொடியூசர் சவுந்தர் பைரவி பேசியதாவது, “இந்த விழாவிற்கு வருகை தந்துள்ள இயக்குநர் ரவிக்குமார், நடிகர் சிவகார்த்திகேயன், படக்குழுவினர் அனைவரையும் வரவேற்கிறோம்” என்றார்.

நடிகர் பாலசரவணன் பேசியதாவது, “இவ்வளவு நாள் எதற்காக காத்திருந்தோமோ அது நடக்கிறது. இந்தப் படத்தில் எனக்கு நல்ல கதாபாத்திரம் கொடுத்த இயக்குநர் ரவிக்குமாருக்கும், சிவகார்த்திகேயன் பிரதருக்கும் படக்குழுவினருக்கும் நன்றி”.

பாடலாசிரியர் விவேக் பேசியதாவது, “ஒருத்தருக்கு வெற்றி கஷ்டப்பட்டு கிடைக்கும்போதுதான் அது வரலாறாக மாறும். அதுபோன்ற ஒரு பாதையில் வந்தவர்தான் சிவகார்த்திகேயன். அதுபோலதான் ‘அயலான்’ படமும் கஷ்டப்பட்டு வந்துள்ளது. நிச்சயம் வெற்றி பெறும். ’மாவீரன்’ போன்ற படத்தை எடுத்து நடிக்க ஒரு தைரியம் வேண்டும். சமூக கருத்துகளை முன்னிறுத்தும் இதுபோன்ற படங்களை சிவகார்த்திகேயன் போன்ற நடிகர்கள் எடுத்து நடிக்க வேண்டும். இந்தப் படத்தில் வாய்ப்புக் கொடுத்த இயக்குநர் ரவிக்குமார், ரஹ்மான், சிவகார்த்திகேயனுக்கு நன்றி. படக்குழுவினருக்கு வாழ்த்துகள்!”

பாடலாசிரியர் மதன் கார்க்கி, “இதுபோன்ற வெவ்வேறு ஜானர்களில் படங்கள் எடுப்பது அரிது. அதனால், இயக்குநர் ரவிக்குமார் இந்த கதையை சொன்னதும் மகிழ்ச்சியாக இருந்தது. நடிகர் என்பதையும் தாண்டி சக பாடலாசிரியராக சிவகார்த்திகேயனுக்கு பாடல் எழுதுவது மகிழ்ச்சி. ரஹ்மான் சார், விவேக் சார் இவர்களுடன் பணிபுரிந்தது கூடுதல் மகிழ்ச்சி”.

கலை இயக்குநர் முத்துராஜ், “இதுபோன்ற ஒரு படத்தில் வேலை பார்த்ததில் மகிழ்ச்சி. ரவிக்குமார் பொறுமையாகவும் தனக்கு என்ன வேண்டும் என்ற தெளிவும் கொண்டவர். அவரின் பொறுமைக்காகவே இந்தப் படம் பெரும் வெற்றி பெறும். சிவகார்த்திகேயன் மீது எனக்கு பெரிய மரியாதை உண்டு. கமர்ஷியலாக எப்படி வேண்டுமானாலும் செய்யலாம் என்றில்லாமல் பொறுப்பாக செய்வார். படக்குழுவினர் சிறப்பாக செய்துள்ளனர்”.

நடிகர் ஷரத், “இந்தப் படத்தில் நடித்தது எனக்கு மகிழ்ச்சி. ஆர்வத்துடன் எதிர்பார்த்துள்ளேன். சிவா சாரின் ‘மாவீரன்’ பார்த்தேன் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. படத்தில் நிறைய ஆக்‌ஷன் உள்ளது. உங்கள் அனைவருக்கும் பிடிக்கும்”.

எடிட்டர் ரூபன், “’அயலான்’ படம் இன்னும் முடியவில்லை. வேலை போய்க்கொண்டுதான் இருக்கிறது. சினிமாவில் இன்று நிறைய ஜானர்ஸ் வருகிறது. இந்த ஜானர் குழந்தைகளில் இருந்து பெரியவர்கள் வரை எல்லோருக்கும் பிடிக்கும். அப்படிதான், ரவி செய்துள்ளார். அவரின் பொறுமைக்கு மிகப்பெரிய நன்றியும் மரியாதையும். இந்தப் படத்தை ஆரம்பித்து வைத்த சிவகார்த்திகேயனுக்கும் தயாரிப்புத் தரப்புக்கும் நன்றி. இந்த டீசர் இரண்டு வருடங்களுக்கு முன்பு எடிட் செய்தது. பொறுமையாக இருந்த ரசிகர்களுக்கும் நன்றி. ஹாலிவுட் இயக்குநர்கள் போல ரவியும் எட்டு வருடமாக இந்தப் படம் செய்துள்ளார். படம் இப்போதும் புதிதாக உள்ளது. எல்லோருக்கும் நன்றி”.

இஷா கோபிகர், “நீண்ட நாட்களுக்குப் பிறகு நான் கோலிவுட்டில் இருக்கிறேன் என்பது மகிழ்ச்சி. இயக்குநர் ரவிக்குமாருக்கும் தயாரிப்பு நிறுவனத்திற்கும் நன்றி. நீங்கள் இவ்வளவு நாள் காத்திருந்ததற்கு நிச்சயம் படம் சூப்பராக இருக்கும். என்னையும் இந்தப் படத்தில் அழைத்ததற்கு நன்றி”.

ஃபேன்தம் சி.ஈ.ஓ பிஜாய், “’அயலான்’ படத்தை உங்கள் அனைவரிடமும் காட்டுவதற்காக ஏழெட்டு வருடங்களாக் காத்திருக்கிறோம். சிவகார்த்திகேயன் சார் இல்லாமல் இந்தப் படம் சாத்தியம் இல்லை. ‘இன்று நேற்று நாளை’ படம் முடிந்த சமயத்தில் இதை ஆரம்பித்தோம். ஒவ்வொரு பரிமாணத்திலும் இந்தப் படத்தைப் பார்த்துள்ளோம். ஹாலிவுட் தரத்தில் இந்தப் படத்தைக் கொண்டு வர முயற்சி செய்தோம். இந்திய சினிமாவில் இப்படி ஒரு படம் வெளிவரவில்லை என இதன் தரத்தை பல ஹாலிவுட் கம்பெனி பாராட்டியுள்ளது”.

இயக்குநர் ரவிக்குமார், “’அயலான்’ படத்திற்கு காத்திருந்த காலக்கட்டம் குறித்து அனைவரும் பேசினார்கள். இதை மிதமாக கடந்து வர உதவியர்கள் என் குடும்பமும் நண்பர்களும்தான். இதற்கு பின்பு மிகப்பெரிய நம்பிக்கையாக இருந்தவர் சிவகார்த்திகேயன். அவர் இந்தக் கதையின் மீது வைத்த நம்பிக்கையில்தான் இத்தனை வருடம் பல சவால்களைக் கடந்து பயணித்து வந்தோம். நீரவ் ஷா, முத்துராஜ் சார் போன்ற பெரிய மாஸ்டர்கள் இந்தப் படத்தில் வேலை பார்த்துள்ளது எனக்குப் பெருமை. அவர்கள்தான் என்னை வழிநடத்தினார்கள். ரஹ்மான் சார்தான் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் என்று சொன்னபோது மகிழ்ச்சியாகவும் பதட்டமாகவும் இருந்தது. ரஹ்மான் சார் நிறைய சுதந்திரம் கொடுத்துள்ளார். ரஹ்மான் சாரின் ரசிகன் நான். அவர் என் படத்திற்கு இசையமைத்திருப்பது மகிழ்ச்சி. வி.எஃப்.எக்ஸ். பிஜாய்க்கு நன்றி. நடிகர்கள் யோகிபாபு, பாலசரவணன், ஷரத் எல்லோருக்கும் நன்றி. என்னுடைய இயக்குநர் குழுவுக்கும் நன்றி” என்றார்.

நடிகர் சிவகார்த்திகேயன் பேசியதாவது, “‘அயலான்’ படம் தீபாவளிக்கு வருவதாக சொல்லி இருந்தோம். ஆனால், சிஜி பணிகளுக்கு இன்னும் சில காலம் இருந்தால் இன்னும் சிறப்பாக புதிய விஷயங்களை சேர்க்கலாம் என சிஜி பணிகள் செய்யும் நிறுவனத்திடம் இருந்து ரெக்வஸ்ட் வந்தது. அதனால், பொங்கலுக்கு வெளியீட்டை மாற்றினோம். நீங்கள் தற்போது டீசரில் பார்க்கும் ஏலியன் வேர்ல்ட் இப்போது உருவாக்கியது. தீபாவளியை விட பொங்கல் விடுமுறை இன்னும் சிறப்பாக உள்ளது. ‘இன்று நேற்று நாளை’ படத்தை திருச்சியில் பார்த்தபோது ரசிகர்கள் டைம் மிஷின் என்ற கான்செப்ட்டை அவ்வளவு ரசித்துக் கொண்டாடினார்கள். அதைப் பார்த்துவிட்டு இயக்குநர் ரவிக்குமாருக்கு வாழ்த்து செய்தி அனுப்பினேன். அதன் பிறகு அவரை சந்தித்து கதை கேட்டேன். இந்த ஏலியன் கதையை ஐந்து நிமிடங்கள் சொன்னார். உடனே சம்மதம் சொன்னேன். முதல் படத்தில் குறைந்த பட்ஜெட்டில் சிறப்பான படத்தை அவர் கொடுத்த நம்பிக்கையில்தான் இந்தப் படத்தில் அவருடன் இணைந்தேன். அவர் தமிழ் மீடியத்தில் படித்தவர். கல்லூரி படிப்பை கரஸில் முடித்தார். படிப்புக்கும் அறிவுக்கும் சம்பந்தமில்லை என்பதை நிரூபித்துவிட்டார் ரவிக்குமார். படத்தை 95 நாட்களில் எடுத்து முடித்து விட்டார். அவ்வளவு பிரிப்பரேஷன். இந்தப் படத்திற்கு ரஹ்மான் சார் இசை இருந்தால் நன்றாக இருக்கும் எனத் தோன்றியது. அவரும் கதைக் கேட்டு உடனே சம்மதம் சொன்னார். ஐந்து வருடங்களுக்கு முன்னால் ரஹ்மான் சாருக்கு என்ன சம்பளம் கொடுத்து கமிட் செய்தோமோ அதையே இப்போது வரை ஓகே சொல்லி எங்களுக்காக புதிய டியூன் இப்போது வரை போட்டுக் கொடுத்தார். அது அவருடைய பெருந்தன்மை. டீசர் பார்த்துவிட்டு நன்றாக இருப்பதாக சொன்னார். இந்தியாவில் லார்ஜ் ஃபார்மேட் கேமராவில் எடுத்த முதல் படம் ‘அயலான்’தான். நீரஜ் சார், முத்துராஜ் சார் என பல ஸ்ட்ராங் டெக்னீஷியன்ஸ் இதில் உள்ளார்கள். இதேபோன்று ஏலியன், ஸ்பேஸ் ஷிப் வைத்து இதற்கு முன்பு எம்.ஜி.ஆர். ஒரு படம் முயற்சி செய்தார். அதற்கு பிறகு நீங்கள் தான் என சொன்னார்கள். அதனால், எம்.ஜி.ஆர்.க்கு அப்புறம் சிவகார்த்திகேயன் தான் என யூடியூப் தலைப்பு வைத்து விடாதீர்கள். அதுபோன்ற கன்செப்ட் என்றுதான் சொன்னேன். படத்தில் 4600 வி.எஃப்.எக்ஸ் ஷாட்ஸ் உள்ளது. இந்தப் படத்தின் மொத்த டெக்னீஷியன்ஸூம் தமிழ் சினிமாவை சேர்ந்தவர்கள். சிஜி கம்பெனி அம்பத்தூரில்தான் உள்ளது. இதற்கு வெளிநாடு போக வேண்டும் என்ற அவசியம் இல்லை. இந்தப் படம் முடித்தவுடன் நானும் ரவிக்குமாரும் சேர்ந்து இன்னொரு படம் செய்கிறோம். ஒருக்கட்டத்தில் படத்திற்கு நிதி தேவை என்ற நிலை வந்தபோது, நான் சம்பளம் வேண்டாம், படம் சிறப்பாக வர வேண்டும் என்று சொன்னேன். ரவிக்குமாரின் நேர்மைக்காக அவர் ஜெயிப்பார். இதுபோன்ற சிறந்த வி.எஃப்.எக்ஸ்ஸோடு சிறந்த படம் இந்தியாவில் இல்லை என்பதை நம்பிக்கையோடு சொல்வேன். ’அயலான்’ படத்தைக் குடும்பத்தோடு திரையரங்குகளில் பொங்கலுக்கு போய் பார்க்கலாம்” என்றார்


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours