சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘கங்குவா’. நடிகர் சூர்யா நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு பூந்தமல்லியை அடுத்துள்ள ஈவிபி பிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இன்று நடைபெற்ற சண்டைக் காட்சியில் நடிகர் சூர்யா பங்கேற்று நடித்து வந்தார். அப்போது எதிர்பாராத விதமாக திடீரென மேலேயிருந்த ரோப் கேமரா அறுந்து விழுந்தது. இதை கவனித்த படப்பிடிப்பு குழுவினரும், சக சண்டைக் கலைஞர்களும் அதிர்ச்சியில் கத்தினர். இதையடுத்து சமயோசிதமாக நடிகர் சூர்யா அங்கிருந்து உடனே விலகினார்.
இதனால் நடிகர் சூர்யா நூலிழையில் உயிர் தப்பினார். எனினும், கேமிரா தோளின் மீது உரசியபடியே விழுந்ததில், நடிகர் சூர்யாவின் தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து, தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அங்கு மருத்துவர்கள் நடிகர் சூர்யாவுக்கு சிகிச்சை அளித்த நிலையில், அவர் சில நாட்கள் ஓய்வு எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையே தன் உடல்நிலை சீராக முன்னேறி வருவதாகவும், ரசிகர்களின் அன்புக்கு மிக்க நன்றி என்று சூர்யா தெரிவித்துள்ளார்.
+ There are no comments
Add yours