‘கோச்சடையான்’ திரைப்படத்திற்காக ரூ.6.2 கோடி ரூபாய் பணம் பெற ஜாமின் கையெழுத்திட்டு, மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் லதா ரஜினிகாந்துக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப் பட்டிருந்தது. இந்த நிலையில், இன்று பெங்களூரு நீதிமன்றத்தில் ஆஜரான அவருக்கு ஜாமின் வழங்கப்பட்டது.
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் அவரது மகள் செளந்தர்யா ரஜினிகாந்த் இயக்கிய திரைப்படம் ‘கோச்சடையான்’. தமிழில் முதன்முதலாக மோஷன் கேப்சர் டெக்னாலஜி பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட இந்த படத்தை மீடிய ஒன் என்டெர்டெயின்மென்ட் சார்பில் முரளி தயாரித்திருந்தார். இதற்காக ஆர்ட் பீரோ என்ற நிறுவனத்திடம் ரூ.6.2 கோடி ரூபாயை முரளி கடனாக பெற்றிருந்தார். இதற்கு ரஜினிகாந்தின் மனைவி, லதா ரஜினிகாந்த் ஜாமின் கையெழுத்திட்டிருந்தார்.
இந்நிலையில் ’கோச்சடையான்’ பொருளாதார ரீதியாக தோல்வியடைந்த நிலையில், வாங்கிய பணத்தை திரும்ப தராமல் இழுத்தடிப்பதாக முரளி, லதா ரஜினிகாந்த் ஆகியோர் மீது பெங்களூரு நீதிமன்றத்தில் ஆர்ட் பீரோ நிறுவனம் வழக்கு தொடுத்தது. இந்த வழக்கை தள்ளுபடி செய்யக்கோரி லதா தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. ஆனால், வழக்கை தள்ளுபடி செய்ய மறுத்த உச்சநீதிமன்றம், பெங்களூரு நீதிமன்றம் விசாரணைக்கு அழைக்கும் போது, லதா ரஜினிகாந்த் நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டது.
இந்த நிலையில் பெங்களூரு நீதிமன்றம் பலமுறை சம்மன் அனுப்பியும் லதா ரஜினிகாந்த் ஆஜராகமல் இருந்தார். இதனால், ஜனவரி 6-ம் தேதிக்குள் ஆஜராகாவிட்டால் கைது செய்யப்படுவார் என எச்சரித்த நீதிமன்றம் லதாவுக்கு எதிராக பிடிவாரண்டும் பிறப்பித்தது. இதையடுத்து, இன்று லதா ரஜினிகாந்த் பெங்களூரு நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார். அவருக்கு ஜாமின் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.
+ There are no comments
Add yours