சென்னை: விஜய்யின் ‘தி கோட்’ திரைப்படம் உலகம் முழுவதும் இதுவரை ரூ.413 கோடியை வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இருப்பினும் முன்னதாக வெளியான ‘லியோ’வின் மொத்த வசூலையும் இப்படம் நெருங்குமா என்பது சந்தேகம்.
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’.மீனாட்சி சவுத்ரி, சிநேகா, பிரசாந்த், பிரபு தேவா, ஜெயராம், உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்தப் படத்தை அர்ச்சனா கல்பாத்தி தனது ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார். படம் கடந்த செப்டம்பர் 5-ம் தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியானது. பல்வேறு சர்ப்ரைஸைகளை கொண்டிருந்த இப்படம் திரைக்கதையில் அழுத்தம் கூட்டவில்லை என விமர்சனங்கள் எழுந்தன.
ரூ.400 கோடி பட்ஜெட்டில் உருவானதாக கூறப்படும் இப்படம் உலக அளவில் 13 நாட்களில் ரூ.413 கோடியை வசூலித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக வெளியான விஜய்யின் ‘லியோ’ மொத்தமாக ரூ.600 கோடியை வசூலித்தது. ஆனால், ‘தி கோட்’ ரூ.500 கோடி வசூலை நெருங்கும் என தெரிகிறது. ஆனால் ‘லியோ’ படத்தின் சாதனையை முறியடிப்பது கடினம் என திரை வர்த்தகர்கள் கணித்துள்ளனர். தொடர்ந்து விஜய்யின் 69-வது படத்தை ஹெச்.வினோத் இயக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
+ There are no comments
Add yours