தமிழ் திரை உலகின் காமெடி நடிகர்களில் ஒருவரான பசி நாராயணன் என்பவர் கிட்டத்தட்ட 500 படங்களில் நடித்துள்ளார். அவரது கடைசி படமான விஜய் நடித்த ‘நினைத்தேன் வந்தேன்’ என்ற படத்தில் ஒரு காட்சியி போது திருமண வீட்டில் ’காபி சாப்பிட்டிங்களாண்ணா.. டிபன் சாப்பிட்டிங்களாண்ணா..’ என்று காமெடி செய்து கலக்கி இருப்பார். மேலும் கவுண்டமணி நடித்த ஒரு படத்தில் ’போன் வயர் பிஞ்சு ஒரு வாரம் ஆச்சு’ என்ற காமெடி இன்றும் சிரிக்க வைக்க அளவுக்கு இருக்கும்.
நடிகர் பசி நாராயணன் சிவகாசியை சேர்ந்தவர். 15 வயதாக இருக்கும்போதே இவர் நடிப்பின் மீது உள்ள ஆர்வம் காரணமாக நாடகத்தில் நடிக்க வந்தார். 1955 ஆம் ஆண்டு மனோகர் நாடக கம்பெனியில் இணைந்து பல நாடகங்களில் இவர் நடித்தார். அதன் பிறகு 1960களில் சினிமாவில் நடிக்க வேண்டும் என்பதற்காக சென்னை வந்தார்.
அவரது நீண்ட தேடலுக்குப் பிறகு எம்ஜிஆர் நடித்த ’அன்பே வா’ திரைப்படத்தில் கல்லூரி மாணவர்களில் ஒருவராக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இதனைத் தொடர்ந்து சிவாஜிகணேசன் நடித்த ’இரு மலர்கள்’ திரைப்படத்தில் டூரிஸ்ட் கைட் ஆக வருவார். அதன் பிறகு ’ராஜா வீட்டு பிள்ளை’ ’குடியிருந்த கோயில்’ ’அக்கரை பச்சை’ ’சிரித்து வாழ வேண்டும்’ போன்ற படங்களில் நடிக்கார்.
இந்த நிலையில் தான் துரை இயக்கத்தில் உருவான ’பசி’ என்ற திரைப்படத்தில் சவுண்ட் கண்ணய்யா என்ற காமெடி கேரக்டரில் நடித்தார். இந்த கேரக்டர் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றதை அடுத்து அதன் பிறகு அவர் பசி நாராயணன் என்று அழைக்கப்பட்டார்.
இதனையடுத்து அவர் 80களில் ஏராளமான படங்களில் காமெடி கேரக்டர்களில் நடித்தார். ’சாட்சி’ ’தங்கைக்கோர் கீதம்’ ’நான் மகான் அல்ல’ ’கன்னி ராசி’ ’ஆண் பாவம்’ ’எங்கள் குரல்’ ’நம்ம ஊரு நல்ல ஊரு’ ’மண்ணுக்குள் வைரம்’ ’சங்கர் குரு’ ’என் தங்கை கல்யாணி’ ’சிவா’ உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்.
எம்ஜிஆர், சிவாஜி, கமல், ரஜினி, சரத்குமார், கார்த்திக், பாண்டியராஜன், பாண்டியன் என மூன்று தலைமுறை நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ள பசி நாராயணன், கடந்த 1990 முதல் 98 வரை அவர் ஏராளமான படங்களில் நடித்தார். 1998 ஆம் ஆண்டு வெளியான ’நினைத்தேன் வந்தேன்’ என்ற திரைப்படத்தில் கல்யாண வீட்டில் அவருடைய காமெடி கலக்கலாக இருக்கும். அந்த படம் தான் அவருடைய கடைசி படம் என்பது குறிப்பிடத்தக்கது.
பசி நாராயணன் 1998 ஆம் ஆண்டு இதய நோய் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவிற்குப் பின்னர் அவர் நடித்த ரத்னா என்ற திரைப்படமும் வெளியாகி இருந்தது.
பசி நாராயணன் அவர்களுக்கு வள்ளி என்ற மனைவியும் ஒரு மகனும் இரண்டு மகள்களும் இருந்தனர். அப்பாவித்தனமான முகம் , காமெடி நடிப்பு என தமிழ் திரை உலகில் 500 படங்களுக்கு மேல் நடித்த பசி நாராயணன் மறைந்தாலும் அவரது நடிப்பு என்றும் ரசிகர்கள் மனதில் நிற்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
+ There are no comments
Add yours