யுவன் இசையில் ‘ஏழு கடல் ஏழு மலை’ படத்தின் 2-வது சிங்கிள் வெளியானது !

Spread the love

சென்னை: யுவன் சங்கர் ராஜா இசையில் சந்தோஷ் நாராயணன் குரலில் வெளியாகியுள்ளது ‘ஏழு கடல் ஏழு மலை’ படத்தின் 2-வது சிங்கிள். இப்பாடலின் லிரிக்கல் வீடியோ ரசிகர்களிடையே கவனம் பெற்று வருகிறது.

பாடல் எப்படி? – சந்தோஷ் நாராயணின் குரலும், யுவனின் இசையும் ஒன்று சேர சங்கமித்த காதல் பாடலாக இப்பாடல் உருவாகியுள்ளது. மொத்தப் பாடலும் ராம் இயக்கத்தில் யுவன் இசையில் வெளியான ‘கற்றது தமிழ்’ படத்தின் ‘பறவையே எங்கு இருக்கிறாய்’ என்ற பாடலை நினைவூட்டுகிறது. கிட்டத்தட்ட அதே சூழலை உணர முடிகிறது. ‘காடோடு பாலை, வெயில் வெளி தாண்டி’என்ற வரி, ‘பறவையே எங்கு இருக்கிறாய்’ பாடலின் நிலப்பரப்பை கண்முன் நிறுத்துகிறது. பாடல் வரிகளை மதன் கார்கி எழுதியுள்ளார்.

காதலியைத் தேடும் காதலனுக்கான வரிகளை தேர்ந்தெடுத்து எழுதியிருக்கிறார். “கவிதைகள் அனைத்தும் தொலைத்த ஓர் மொழியாய் உனை இழந்து வாடுகிறேன்” போன்ற வரிகள் கவனம் பெறுகின்றன. ஓரிரு இடங்களில் ஈர்க்கும் இப்பாடலின் பலம் சந்தோஷ் நாராயணன் குரல்.

ஏழு கடல் ஏழு மலை: ‘கற்றது தமிழ்’,‘தங்க மீன்கள்’, ‘பேரன்பு’ உள்ளிட்ட படங்களை இயக்கிய ராம் இயக்கத்தில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள புதிய படம் ‘ஏழு கடல், ஏழு மலை’. ‘பிரேமம்’ படம் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் ஒரு தனி இடம் பிடித்த நடிகர் நிவின் பாலி இப்படத்தில் நாயகனாக நடித்துள்ளார். நாயகியாக அஞ்சலி நடித்துள்ள இப்படத்தை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது வி ஹவுஸ் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் தயாரித்துள்ளார். முக்கிய கதாபாத்திரத்தில் சூரி நடித்துள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்தப் படத்தின் வெளியீட்டு தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. பாடல் வீடியோ:


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours