பெங்களூருவில் நடந்த போதை பார்ட்டியின் போது போதைப்பொருள் உட்கொண்டது உறுதிப்படுத்தப்பட்டதை தொடர்ந்து, தெலுங்கு நடிகை ஹேமா கைது செய்யப்பட்டுள்ளார். முன்னதாக அவர் தான் அந்த பார்ட்டியில் கலந்துகொள்ளவில்லை என சொல்லிவந்தார்.
கடந்த மே 20ஆம் தேதி பெங்களூரு உள்ள ஒரு பண்ணை வீட்டில், ஹைதராபாத்தைச் சேர்ந்த தொழில் அதிபரான வாசு, தனது பிறந்தநாளையொட்டி போதை விருந்து நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தார். அப்போது அந்த நிகழ்ச்சியில் போதைப்பொருளும் பயன்படுத்தப்பட்டது கண்டறியப்பட்டது.
இந்த விருந்தில் தெலுங்கு திரையுலகினர், ஐ.டி.ஊழியர்கள் என 73 ஆண்களும், 30 பெண்களும் பங்கேற்றுள்ளனர். இந்த விருந்தில் தெலுங்கு நடிகை ஹேமா கலந்துகொண்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகின. ஆனால் அவர் அதற்கு மறுப்பு தெரிவித்தார். அதன்பின்னர் பெங்களூரு நகர காவல்துறையினர் நடந்திய தீவிர விசாரணையில் ஹேமா அந்த விருந்தில் கலந்துகொண்டதை உறுதி செய்தனர். மேலும், ஹேமாவின் ரத்த மாதிரிகள் பெறப்பட்டு சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அதில் அவர் போதைப்பொருள் பயன்படுத்தியது உறுதிசெய்யப்பட்டது.
இதனையடுத்து மத்திய குற்றப்பிரிவின் (சிசிபி) போதைப்பொருள் தடுப்புப் பிரிவில் ஆஜராகும்படி ஹேமாவுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால், உடல் நலக்குறைவால் தன்னால் விசாரணைக்கு ஆஜராக முடியாது என்று கூறி ஒருவாரம் கால அவகாசம் கேட்டிருந்தார். இதையடுத்து, மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டும் ஹேமா உள்பட 8 பேரும் போலீஸ் விசாரணைக்கு ஆஜராகவில்லை. இந்த நிலையில் தற்போது நடிகை ஹேமாவை மத்திய குற்றப் பிரிவு குழுவினர் கைது செய்துள்ளனர்.
மே 20 அன்று நடத்தப்பட்ட போதை பார்ட்டி தொடர்பாக 6 பேர் ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், அந்த விருந்தில் கலந்துகொண்ட 59 ஆண்களின் இரத்த மாதிரிகள் மற்றும் 27 பெண்களின் இரத்த மாதிரிகளில் அவர்கள் போதைப்பொருள் பயன்படுத்தியது உறுதியானது.
அவர்களிடம் நடத்திய சோதனையில் எம்.டி.எம்.ஏ (எக்ஸ்டசி) மாத்திரைகள், எம்.டி.எம்.ஏ படிகங்கள், ஹைட்ரோ கஞ்சா, கோகைன், உயர்ரக கார்கள், ரூ.1.5 கோடி மத்திப்புள்ள டி.ஜே கருவிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
+ There are no comments
Add yours