நடிகர் சிம்புவின் படத்துக்காக ஆல் இன் பிக்சர்ஸ் நிறுவனத்திடம் வாங்கிய அட்வான்ஸ் தொகையை வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்குள் திருப்பிக் கொடுக்க, இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனனுக்கு உத்தரவிட்டுள்ள சென்னை உயர் நீதிமன்றம், அவ்வாறு பணத்தைக் கொடுக்காவிட்டால் விக்ரம் நடித்துள்ள “துருவ நட்சத்திரம்” படத்தை வெளியிடக் கூடாது என உத்தரவிட்டுள்ளது.
கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கி, தயாரித்திருக்கும் “துருவ நட்சத்திரம்” திரைப்படத்தில் விக்ரம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படம் உலகம் முழுவதும் நாளை (நவ.24) வெளியாக உள்ளது. இந்தப் படத்தை வெளியிட இடைக்கால தடை விதிக்கக்கோரி ஆல் இன் பிக்சர்ஸ் நிறுவனத்தில் பங்குதாரராக உள்ள விஜய் ராகவேந்திரா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
அதில், “சிம்புவை நாயகனாக வைத்து “சூப்பர் ஸ்டார்” என்ற படத்தை இயக்குவதற்காக, கவுதம் வாசுதேவ் மேனன் தங்களது நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டார். அதற்கு முன்பணமாக கடந்த 2018-ம் ஆண்டு 2 கோடியே 40 லட்சம் ரூபாய் அளிக்கப்பட்டது. அந்த ஒப்பந்தப்படி அந்த பட வேலைகள் நடைபெறாத நிலையில் வாங்கிய முன்பணத்தை இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் திருப்பித் தரவில்லை. எனவே எங்களிடம் பெற்ற தொகையை திருப்பி அளிக்காமல் துருவ நட்சத்திரம் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும்” என மனுவில் கோரியிருந்தார்.
இந்த மனு நீதிபதி சி.சரவணன் முன்பு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராகவாச்சாரி, “துருவ நட்சத்திரம் படத்தின் விநியோக உரிமையை விற்பனை செய்ததன் மூலம் கவுதம் வாசுதேவ் மேனன் பணம் பெற்றுள்ளார். இருந்தபோதிலும், தங்களுக்கு பணத்தை திரும்ப அளிக்கவில்லை” என கூறினார்.
அப்போது கவுதம் வாசுதேவ் மேனன் சார்பில் வழக்கறிஞர் ரேவதி மணிவண்ணன் ஆஜராகி, படத்தின் வெளியீட்டு தேதி இரண்டு மாதங்களுக்கு முன்பே அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் படத்துக்கு தடைக்கோரி கடைசி நேரத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும், பணத்தை திருப்பி அளிக்காமல் படத்தை வெளியிடமாட்டோம் என்று உறுதியளிக்கப்பட்டது.
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, நாளை காலை 10.30 மணிக்குள் 2 கோடியே 40 லட்ச ரூபாய் பணத்தை திருப்பி அளிக்க வேண்டும் என கவுதம் வாசுதேவ் மேனனுக்கு உத்தரவிட்டார். அவ்வாறு பணத்தைக் கொடுக்கவில்லை என்றால் துருவ நட்சத்திரம் படத்தை இந்தியா மற்றும் வெளிநாடுகள் என எங்கும் வெளியிடக்கூடாது என உத்தரவிட்டுள்ளார்.
+ There are no comments
Add yours