ஆருத்ரா நிறுவன மோசடி வழக்கில் துபாயில் தலைமறைவாக இருந்த பாஜக நிர்வாகியும், நடிகருமான ஆர்.கே.சுரேஷ் விசாரணைக்கு ஆஜராக சென்னைக்கு இன்று வந்தார்.அவரிடம் குடியுரிமை அதிகாரிகள் விசாரணை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை அமைந்தகரையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்ட ஆருத்ரா கோல்டு நிறுவனம், முதலீடுகளுக்கு 25 முதல் 30 சதவீதம் வரை வட்டி எனக் கூறி 1 லட்சம் முதலீட்டாளர்களிடம் இருந்து ரூ.2,438 கோடி மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இதுதொடர்பான புகார்களின் அடிப்படையில் பொருளாதார குற்றத்தடுப்புப் பிரிவு, அந்த நிறுவனத்தின் இயக்குநர்கள் உட்பட 21 பேர் மீது வழக்குப்பதிவு செய்தது.
இந்த வழக்கில் கைதான ரூசோ என்பவரிடம் போலீஸார் நடத்திய விசாரணையில், நடிகர், தயாரிப்பாளர் மற்றும் பாஜக ஒபிசி பிரிவு துணைத் தலைவரான ஆர்.கே.சுரேஷுக்கு ஆருத்ரா மோசடியில் தொடர்பிருப்பதாக தகவலை பெற்றது.
அதனடிப்படையில் போலீஸ் விசாரணைக்கு உரிய ஆவணங்களுடன் நேரில் ஆஜராகும்படி ஆர்.கே.சுரேஷுக்கு பொருளாதாரக் குற்றப்பிரிவு சம்மன் அனுப்பியது. ஆனால், அவர் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில் சம்மனை ரத்து செய்யக்கோரி ஆர்.கே.சுரேஷ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
இதனிடையே, ஆர்.கே.சுரேஷுக்கு எதிராக சென்னை மத்திய பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்தனர். இந்த நோட்டீஸை திரும்ப பெற பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸாருக்கு உத்தரவிடக்கோரி ஆர்.கே.சுரேஷ் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
அதில், படத் தயாரிப்பு தொடர்பாகவே ரூசோ தம்மை அணுகியதாகவும், அது தொடர்பாக மட்டுமே பண பரிவர்த்தனை நடந்ததாகவும், ஆரூத்ரா மோசடிக்கும் தமக்கும் தொடர்பில்லை என்றும் கூறியுள்ளார். மேலும், தனது மனைவி மற்றும் குழந்தையைக் கவனித்து கொள்வதற்காக தற்போது துபாயில் உள்ள நிலையில் நாடு திரும்பினால் கைது செய்யும் வகையில் லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
லுக் அவுட் நோட்டீஸ் காரணமாக நாடு திரும்பியதும் தாம் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதால் அதனைத் திரும்ப பெற உத்தரவிட வேண்டுமென கோரியுள்ளார். இந்த மனு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஆர்.கே.சுரேஷ் சார்பில் வழக்கறிஞர் எஸ்.வீரராகவன் ஆஜராகி, வரும் டிசம்பர் மாதம் 10-ம் தேதி ஆர்.கே.சுரேஷ், நாடு திரும்ப உள்ளதாக கூறினார்.
இந்த நிலையில், துபாயில் இருந்து நடிகர் ஆர்.சுரேஷ் சென்னைக்கு இன்று வந்தார். அவரை விமான நிலையத்தில் குடியுரிமை அதிகாரிகள் பிடித்து விசாரித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
அப்போது, நீதிமன்ற உத்தரவின்படி பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸ் முன் விசாரணைக்கு ஆஜராக வந்துள்ளதாக நடிகர் ஆர்.கே.சுரேஷ் தெரிவித்தார். இதையடுத்து, அவரை வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டது. நாளை மறுதினம் (டிச.12) அவர் விசாரணைக்கு ஆஜராக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
+ There are no comments
Add yours