நீதிமன்றத்தில் சரணடைந்த பவர் ஸ்டார் சீனிவாசன் !

Spread the love

15 கோடி கடன் வாங்கித் தருவதாக ஏமாற்றிய வழக்கில் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டிருந்த நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் ராமநாதபுரம் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினத்தைச் சேர்ந்தவர் முனியசாமி. இவர் அப்பகுதியில் உப்பளங்கள் மற்றும் இறால் பண்ணைகள் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் இவரது தொழிலை மேம்படுத்துவதற்காக இவருக்கு கடன் தேவைப்பட்டிருக்கிறது. அப்போது இவருக்கு அறிமுகமான நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன், தன்னால் 15 கோடி வரை கடன் பெற்று தர முடியும் என்று கூறியிருக்கிறார். அதற்காக ஆவணங்களுக்காக முன்னதாக ரூபாய் 14 லட்சம் பணம் தேவைப்படும் என்று சீனிவாசன் கேட்டிருக்கிறார்.

அவர் கேட்டபடி ரூபாய் 14 லட்சம் பணத்தை கடந்த 2019 ம் ஆண்டு முனியசாமி அவரிடம் கொடுத்திருக்கிறார். கொடுத்து பல மாதங்கள் ஆகியும் பவர் ஸ்டார் சீனிவாசன் வாக்குறுதி அளித்தபடி கடன் வாங்கித் தரவில்லை.

இதனால் ஒரு கட்டத்தில் மனம் வெறுத்துப்போன முனியசாமி தான் கொடுத்த 14 லட்சத்தை திருப்பித் தருமாறு கேட்டிருக்கிறார். அதற்கு பவர் ஸ்டார் சீனிவாசன் 14 லட்சத்திற்கு செக் கொடுத்துள்ளார். ஆனால் சீனிவாசன் கொடுத்த செக் வங்கியில் பணம் இல்லை என்று திரும்ப வந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த முனியசாமி ராமநாதபுரம் மாவட்ட முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் இதுகுறித்து வழக்கு தொடுத்தார்.

இந்த வழக்கில் தொடர்ந்து ஆஜராகாமல் நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் இருந்ததால் ராமநாதபுரம் மாவட்ட முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி நிலவேஸ்வரன், சீனிவாசனுக்கு பிடிவாரண்டு பிறப்பித்து உத்தரவிட்டிருந்தார்.

அதையடுத்து சீனிவாசனை போலீஸார் தொடர்ந்து தேடி வந்தனர். அவர்களின் கண்களுக்கு சிக்காமல் தலைமறைவாக இருந்து வந்த நிலையில், இன்று ராமநாதபுரம் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் மூலமாக பவர் ஸ்டார் சீனிவாசன் சரணடைந்தார். இதனால் நீதிமன்ற வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours