ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசி கைது செய்யப்பட்ட கருக்கா வினோத் மீது குண்டாஸ் சட்டம் பதியப்பட்டது.
கடந்த அக்டோபர் மாதம் 25ஆம் தேதி சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையின் (ராஜ்பவன்) முதல் கேட் முன்பு உள்ள பாரிகாட் (இரும்பு தடுப்பு) மீது கருக்கா வினோத் பெட்ரோல் பாட்டில் குண்டு வீசினார். வீசிய உடன் அருகில் இருந்த சென்னை மாநகர காவல்துறையினர் அவரை உடனடியாக கைது செய்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக, சென்னை காவல்துறையினர் விளக்கம் அளித்தனர். கருக்கா வினோத் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும், பெட்ரோல் குண்டு வீசுவதற்கு சில நாட்களுக்கு முன்னர் தான் புழல் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்தார் என்றும்,
சம்பவத்தன்று சைதாப்பேட்டையில் இருந்து கிண்டி வரையில் தனியே யார் துணையும் இன்றி நடந்து வந்ததையும், அதன் பிறகு ஆளுநர் மாளிகை நோக்கி பெட்ரோல் குண்டு வீசப்படவில்லை. அருகில் உள்ள பேரிகாட் மீது தான் பெட்ரோல் குண்டு வீசியுள்ளார். மேலும், ஆளுநர் மாளிகை ஊழியர்கள் கருக்கா வினோத்தை பிடிக்கவில்லை. சென்னை மாநகர காவல்துறையினர் தான் கருக்கா வினோத்தை பிடித்துள்ளனர் என சிசிடிவி காட்சிகள் உடன் மூலம் சென்னை காவல்துறையினர் விளக்கம் அளித்து இருந்தனர்.
கைது செய்யப்பட்டு புழல் சிறையில் வைக்கப்பட்டு இருந்த கருக்கா வினோத்தை 3 நாள் காவலில் எடுத்து சென்னை காவல்துறையினர் விசாரணை செய்து வந்தனர். இதனை தொடர்ந்து, தற்போது கருக்கா வினோத் மீது குண்டாஸ் சட்டம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கருக்கா வினோத் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதால் சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் பரிந்துரையின் பெயரில் கருக்கா வினோத் மீது குண்டாஸ் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
+ There are no comments
Add yours