சபரிமலை யாத்திரைக்குச் சென்ற தமிழகத்தைச் சேர்ந்த 12 வயது சிறுமி மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலத்தைச் சேர்ந்த குமரன், ஜெயலட்சுமி தம்பதிகளின் 12 வயது மகள் பத்மஸ்ரீ, அப்பகுதியை சேர்ந்த குழுவினருடன் சபரிமலைக்கு யாத்திரை சென்றிருந்தார். அப்பச்சிமேடு பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த பத்மஸ்ரீ திடீரென மயங்கி விழுந்தார்.
இதனால் அதிர்ச்சியடைந்த உடன் சென்றோர், அவரை மீட்டு அப்பச்சிமேடு மருத்துவ முகாமிற்கு அழைத்து சென்றனர். ஆனால், சிறுமி ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து பத்மஸ்ரீயின் உடல் பிரேத பரிசோதனைக்காக பம்பா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சிறுமிக்கு 3 வயதில் இருந்தே இதயநோய் இருந்து வந்ததாகவும், அதன் காரணமாகவே உயிரிழந்திருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர். இருப்பினும் போலீஸார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே திருப்பதி கோயிலில் உள்ளது போல் வரிசையில் செல்லும் முறையை சபரிமலை தேவஸ்தானம் அறிமுகப்படுத்தியிருந்தது. ஆனால், அது பெரும் தோல்வியில் முடிவடைந்தது. கடந்த வெள்ளிக்கிழமை முதல் சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
இந்நிலையில், பலர் வரிசையிலிருந்து விலகி, வனப்பகுதி வழியாக சன்னிதானம் நோக்கி பயணிக்கத் தொடங்கினர். இதனால் இத்திட்டத்தை மறுபரிசீலனை செய்ய தேவஸ்தான நிர்வாகிகள் முடிவு செய்துள்ளனர்.
+ There are no comments
Add yours