பாமக பிரமுகருக்கு சரமாரி அரிவாள் வெட்டு.. கவலைக்கிடம்- பதற்றத்தில் கடலூர் !

Spread the love

கடலூர்: கடலூரில் தனது வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்த பாமக நிறுவனர் சங்கரை இருசக்கர வாகனங்களில் வந்த மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டி தாக்குதல் நடத்தினர். இதில் படுகாயமடைந்த சங்கர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கடலூர் திருப்பாதிரிப்புலியூர் சூரப்ப நாயக்கன் சாவடி பகுதியை சேர்ந்தவர் மகலிங்கம் மகன் சங்கர் என்கின்ற சிவசங்கர் (43). கேபிள் டிவி தொழில் நடத்திவரும் இவர் பாமகவில் உள்ளார். கடலூர் நகர வன்னியர் சங்க முன்னாள் தலைவர். இவர் இன்று (ஜூலை 6) பிற்பகல் தனது வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்தபோது இருச்சகர வாகனங்களில் வந்த நான்கு மர்ம நபர்கள் இவரை சரமாரியாக வெட்டினர். இதைப் பார்த்து அருகில் உள்ளவர்கள் கூச்சல் இடவே அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர். பலத்த காயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த சங்கரை அருகில் இருந்தவர்கள் மீட்டு கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

சங்கருக்கு கடலூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கழுத்து, வாய், முதுகு என பல்வேறு பகுதிகளிலும் வெட்டுக் காயம் ஏற்பட்டுள்ள நிலையில் அவருக்கு தற்போது மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். கடந்த சில தினங்களுக்கு முன்பு வண்டிப்பாளையம் பகுதியில் ஒரு கொலை சம்பவம் நடந்த நிலையில் தற்போது பாமக பிரமுகர் மர்ம நபர்களால் வெட்டப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சங்கரின் ஆதரவாளர்கள் கடலூர் அரசு மருத்துவமனையில் குவிந்து வருவதால், கடலூரில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், அரசு மருத்துவமனையிலும் சூரப்பநாயக்கன் சாவடி பகுதியில் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து சங்கரை மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஆயத்தமாகி வருகின்றனர்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours