பெங்களூரு: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் டேவிட் ஜான்சன் வியாழக்கிழமை தனது அடுக்குமாடி குடியிருப்பின் பால்கனியில் இருந்து விழுந்ததில் உயிரிழந்தார். அவருக்கு வயது 52. கர்நாடகாவைச் சேர்ந்த இவரின் உயிரிழப்பு, தற்கொலையா என்பதைக் கண்டறிய போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கர்நாடக மாநிலம் கொத்தனூர் பகுதியில் வசித்து வரும் டேவிட் ஜான்சனின் அடுக்குமாடி குடியிருப்பில் நான்காவது மாடியின் பால்கனியில் இருந்து கீழே விழுந்துள்ளார். இதற்கிடையே, அவரின் உயிரிழப்பை இயற்கைக்கு மாறான மரணம் என காவல் துறை வழக்குப் பதிந்துள்ளது.
டேவிட் ஜான்சன் சில காலமாக போதை ஒழிப்பு மையத்தில் சிகிச்சை எடுத்துவந்ததாகவும், கடந்த வாரம் கடுமையான வயிற்று வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் என்றும் காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இன்று மாடியில் இருந்து விழும்போது அவரை யாரும் பார்க்கவில்லை என்பதாலும், தற்கொலை குறிப்புகள் எதுவும் கிடைக்கவில்லை என்பதாலும் போலீஸார் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர்.
இந்திய அணிக்காக இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள டேவிட் ஜான்சன், முதல்தர கிரிக்கெட்டில், 33 போட்டிகளில் விளையாடி 125 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளனர். ரஞ்சி டிராபியில் கேரளாவுக்கு எதிராக 10 விக்கெட்டுகளை வீழ்த்தியதை அடுத்து இந்திய அணிக்கு தேர்வானார். அனில் கும்ப்ளே, ஜவகல் ஸ்ரீநாத், வெங்கடேஷ் பிரசாத் என கர்நாடகாவில் இருந்து தேர்வான இந்திய பந்துவீச்சாளர்கள் உடன் நெருக்கமாக இருந்தவர் டேவிட் ஜான்சன். அவரின் மறைவுக்கு பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா, அனில் கும்ப்ளே, கவுதம் கம்பீர் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
+ There are no comments
Add yours