மும்பையில் இரண்டு சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை.. வெடித்த மக்கள் போராட்டம்

Spread the love

மும்பை: மகாராஷ்டிராவின் தானே மாவட்டத்தில் உள்ள பத்லாபூரில் ஒரு பள்ளியில் இரண்டு சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படும் விவகாரத்தில் கடமை தவறியதற்காக மூன்று போலீஸ் அதிகாரிகளை இடைநீக்கம் செய்துள்ள மாநில அரசு, இது தொடர்பாக விசாரிக்க சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்துள்ளது.

பத்லாபூரில் உள்ள ஒரு மழலையர் பள்ளியில் படிக்கும் மூன்று மற்றும் நான்கு வயதுடைய இரண்டு சிறுமிகளை பள்ளியின் உதவியாளர் கடந்த 17-ம் தேதி தகாத இடங்களில் தொட்டு அத்துமீறியதாகக் கூறப்படுகிறது. பள்ளியின் கழிவறையில் நடந்ததாகக் கூறப்படும் இச்சம்பவம் குறித்து இரு குழந்தைகளும் தங்கள் பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்ட சிறுமிகளின் பெற்றோர்கள் பத்லாப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கச் சென்றபோது 11 மணி நேரம் காத்திருக்க வைத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்தச் சம்பவத்தைக் கண்டித்து அந்தப் பள்ளியில் பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டுள்ளனர். அதேநேரத்தில், வேறு சிலர் பத்லாபூர் ரயில் நிலையத்துக்குச் சென்று ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இன்று (ஆக. 20) காலை 8 மணி முதல் இந்தப் போராட்டம் நடந்தது. மிகப் பெரிய எண்ணிக்கையில் பொதுமக்கள் ரயில் நிலையத்தில் குவிந்ததை அடுத்து, அரசு உயர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

எனினும், இந்தச் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், கடமை தவறிய பத்லாபூர் காவல்துறையினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், பள்ளி சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை விசாரிக்கும் பணியில் தவறியதாகக் கூறி, மூன்று போலீஸ் அதிகாரிகளை மகாராஷ்டிர அரசு பணி இடைநீக்கம் செய்துள்ளது. இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள துணை முதல்வரும் உள்துறை அமைச்சருமான தேவேந்திர ஃபட்னாவிஸ், “பத்லாபூர் காவல் நிலையத்தில் கடமை தவறியதற்காக மூத்த காவல் ஆய்வாளர், உதவி சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் தலைமைக் காவலர் ஆகியோரை உடனடியாக இடைநீக்கம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், இரண்டு சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதை விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கை விரைவு நீதிமன்றத்தில் விசாரிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தானே காவல் துறை ஆணையருக்கு ஃபட்னாவிஸ் உத்தரவிட்டுள்ளார். இதனிடையே, பள்ளிச் சிறுமிகளிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாகக் கூறப்படும் பள்ளி உதவியாளர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவத்தை அடுத்து, பள்ளி நிர்வாகம் திங்கள்கிழமை (ஆகஸ்ட் 19) தாமதமாக முன்வந்து இச்சம்பவத்துக்கு பொறுப்பான தலைமையாசிரியர், வகுப்பு ஆசிரியர் மற்றும் ஒரு பெண் உதவியாளர் ஆகியோரை பணியில் இருந்து இடைநீக்கம் செய்துள்ளது. மேலும், நடந்த இந்தச் சம்பவத்துக்காக மன்னிப்பு கோருவதாகவும் பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதோடு, பள்ளியில் ஹவுஸ் கீப்பிங் ஒப்பந்தம் பெற்ற நிறுவனத்தை கறுப்புப் பட்டியலில் சேர்த்துள்ளதாகவும் அது கூறியுள்ளது. இந்தச் சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பல அமைப்புகள் பத்லாபூர் பந்த் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours