எம்எஸ்எம்இ மோசடி தொடர்பாக நடிகை நமீதாவின் கணவர் வீரேந்திர சவுத்ரி மற்றும் மஞ்சுநாத் ஆகிய இருவருக்கு சேலம் போலீஸார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
சேலத்தில் எம்எஸ்எம்இ ப்ரோமோஷன் கவுன்சில் என்ற அமைப்பின் சார்பில் நிறுவன உரிமையாளர்கள் உடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி கடந்த வாரம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அந்த அமைப்பின் தேசிய தலைவர் முத்துராமன், தேசிய செயலாளரும் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த துஷ்யந்த் யாதவ் மற்றும் தமிழ்நாடு பிரிவின் தலைவராக இருந்த நடிகையும் பாஜக பிரமுகருமான நமீதாவின் கணவர் வீரேந்திர சவுத்ரி ஆகியோர் கலந்து கொண்டனர்.
அப்போது சிறு, குறு தொழில் உரிமையாளர்களுடன் மத்திய அரசின் கடன் விவகாரம் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதில் சிறப்பு அழைப்பாளராக நடிகை நமீதாவும் கலந்து கொண்டார்.
கூட்டத்தில் வைக்கப்பட்ட பேனரில் இந்திய அரசின் அசோக முத்திரை சின்னம் பயன்படுத்தப்பட்டிருந்தது. இதனிடைய அரசு சின்னத்தை தவறாக பயன்படுத்தியதாகவும், தொழில் செய்ய கடன் பெற்று தருவதாக கூறி பல கோடி ரூபாய் மோசடி செய்ததாகவும் பைனான்சியர் கோபால்சாமி என்பவர் முத்துராமன், துஷ்யந்த் யாதவ் ஆகியோர் மீது சூரமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
இந்த புகாரின் கீழ் முத்துராமன், துஷ்யந்த் யாதவ் ஆகிய இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் தமிழ்நாடு பிரிவின் தலைவராக பதவி வாங்குவதற்காக நமீதாவின் கணவர் வீரேந்திர சவுத்ரி, 4 கோடி ரூபாய் வரை கொடுத்ததாக கோபால்சாமி தனது புகாரில் தெரிவித்திருந்தார்.
அதன் பேரில் நமீதாவின் கணவர் சௌத்ரி மற்றும் பாஜக ஊடகப்பிரிவு செயலாளரும் முத்துராமன் உதவியாளருமான மஞ்சுநாத் ஆகிய இருவருக்கும் விசாரணைக்கு ஆஜராகுமாறு சூரமங்கலம் போலீஸார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
+ There are no comments
Add yours