11, 12-ம் வகுப்புகளுக்கு புதிய NCERT பாடப்புத்தகங்கள்!

Spread the love

11 மற்றும் 12-ம் மாணவர்களுக்காக என்சிஇஆர்டி தயாரித்த புத்தகங்களில் பாபர் மசூதி, குஜராத் கலவரம், இந்துத்துவா பற்றிய குறிப்புகள் கைவிடப்பட்டுள்ளது சர்ச்சைக்கு வாய்ப்பாகி இருக்கிறது.

தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலான என்சிஇஆர்டி வெளியிட்ட புதிய பாடப்புத்தகங்களின் சமீபத்திய திருத்தங்கள் அடுத்த சர்ச்சைக்கு அடித்தளமிட உள்ளன. பாபர் மசூதி இடிப்பு, குஜராத் கலவரங்களில் முஸ்லிம்கள் கொல்லப்பட்டது, இந்துத்துவா பற்றிய குறிப்புகள் பாடங்களில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. மேலும் மணிப்பூரை இந்தியாவுடன் இணைப்பது பற்றிய குறிப்புகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.

மேலும், சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்தல், ’ஆசாத் பாகிஸ்தான்’ என்ற சொல்லை ’பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு ஜம்மு காஷ்மீர்’ என்று மாற்றுவது மற்றும் இடதுசாரிகள் குறித்தான ஒரு பத்தியை திருத்துவது ஆகியவையும் புதிய மாற்றங்களில் அடங்கும். நீக்கப்பட்ட இந்த பாடக்குறிப்புகள் மற்றும் தலைப்புகள் குறித்து என்சிஇஆர்டி எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. 11 மற்றும் 12-ம் வகுப்புகளின் அரசியல் அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடப்புத்தகங்களில் இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

என்சிஇஆர்டியின் பாடத்திட்ட வரைவுக் குழுவால் தயாரிக்கப்பட்ட மாற்றங்களை விவரிக்கும் ஆவணத்தின்படி, ராம ஜென்மபூமி இயக்கம் பற்றிய குறிப்பு ’அரசியலில் சமீபத்திய வளர்ச்சியின் படி’ என மாற்றப்பட்டுள்ளது. 11-ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் மதச்சார்பின்மை பற்றிய அத்தியாயம், ’2002-ல் குஜராத்தில் கோத்ராவிற்குப் பிந்தைய கலவரத்தின் போது 1,000 க்கும் மேற்பட்ட மக்கள் படுகொலை செய்யப்பட்டனர்; அவர்களில் பெரும்பாலானோர் முஸ்லிம்கள்’ என்பது ’2002 குஜராத் கோத்ரா கலவரத்தின் போது 1,000-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்’ என மாற்றப்பட்டுள்ளது.

இந்த மாற்றத்திற்கு பின்னே என்சிஇஆர்டி தரும் விளக்கம், “எந்தவொரு கலவரத்திலும், சமூகம் முழுவதும் உள்ள மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். அது குறிப்பிட்ட ஒரு சமூகமாக மட்டும் இருக்க முடியாது” என்று தெரிவிக்கபட்டுள்ளது. இதே போன்று 12-ம் வகுப்பின் அரசியல் அறிவியல் பாடப்புத்தகத்தின் ’சுதந்திரத்திற்குப் பிறகு இந்தியாவில் அரசியல்’ என்ற பாடத்தில் முன்னாள் ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியலமைப்பின் 370 வது பிரிவை ரத்து செய்ததற்கான குறிப்பைச் சேர்க்கும் வகையில் ஒரு பத்தி திருத்தப்பட்டுள்ளது.

இவற்றுடன் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பற்றிய பாடம், மணிப்பூர் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது தொடர்பான பத்திகள் ஆகியவை திருத்தப்பட்டதுடன், பாபர் மசூதி மற்றும் இந்துத்துவ அரசியல் பற்றிய குறிப்புகள் கைவிடப்பட்டுள்ளன. இந்த புத்தகங்களில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் அவை சந்தைக்கு வந்த பின்னரே அதற்கு எழும் ஆதரவு மற்றும் எதிர்ப்பு குறித்து ஒரு முடிவுக்கு வர முடியும்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours